மாற்றுத் திறனாளிகள் தடுப்பூசி செலுத்த சிறப்பு வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன் வந்து பதிவு செய்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்ற நிலையில் மத்திய அரசு தரப்பில், தமிழகத்துக்கான ஆக்சிஜன் ஒதுக்கீடு 519 மெட்ரிக் டன்னாக அதிகரிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.
டி.ஆர்.டி.ஓ. மூலம் ஆக்சிஜன் உற்பத்தி வசதியை ஏற்படுத்த கோரி மாநில அரசு பி.எம்.கேர் அமைப்புக்கு விண்ணப்பிக்கலாம் எனக் கூறியது. இதையடுத்து பி.எம்.கேர் அமைப்புக்கு விண்ணப்பிக்கக் கோரி தமிழக அரசுக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம், தடுப்பூசி கொள்முதல் செய்ய டெண்டர் கோருவது தொடர்பாக விளக்கமளிக்க உத்தரவிட்டது.
கொரோனாவுக்கு எதிராக போராடும் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு நன்றி தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம், மருத்துவமனைகளில் இருந்து தடுப்பூசி மையங்களை அகற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு அறிவுறுத்தியது. மாற்றுத் திறனாளிகள் தடுப்பூசி செலுத்த சிறப்பு வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு அறிவுறுத்திய உயர்நீதிமன்றம், வழக்கின் விசாரணையை நாளைக்கு ஒத்தி வைத்தது







