கொரோனா வைரஸ் பரவல் திடீரென மீண்டும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா, கேரளா ஆகிய மாநிலங்களில் கொரோனா மீண்டும் வேகமெடுத்துள்ளது.
தமிழகத்திலும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளது.
இந்நிலையில், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஆளும் திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
கொரோனா தொற்று நோயின் முதல் அலை, இரண்டாவது அலை, மூன்றாவது அலை ஆகியவை முடிந்து, கடந்த இரண்டு மாதங்களாக அந்தப் பெயரை மறந்திருந்த நிலையில், கொரோனா தொற்று நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஒமைக்ரான் வைரசின் மாறுபட்ட வடிவங்களினாலான வைரசால் தமிழ்நாட்டில் சிலர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற செய்தி வருவதும் மீண்டும் ஒருவித அச்சத்தை மக்கள் மனதில் ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மட்டும் 152 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். கடந்த மூன்று மாதங்களில் இது மிகவும் அதிகமானது என்றும், மகாராஷ்டிரா மற்றும் கேரளாவில் இதன் தாக்கம் அதிகமாக இருப்பதாகவும், இந்த இரண்டு மாநிலங்களிலிருந்து மட்டும் கடந்த வாரத்தில் கொரோனா தொற்றினால் 60 விழுக்காடு நபர்கள் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மொத்தத்தில் 10 மாநிலங்களில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன.
இதையும் படியுங்கள்: ரோந்து வாகனங்கள் பயன்பாடு; முதலமைச்சர் தொடங்கி வைத்தார்
இதனைக் கட்டுப்படுத்தும் வகையில், முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைபிடித்தல், கைகளை அடிக்கடி கழுவுதல் உள்ளிட்ட வழிகாட்டி நெறிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தி, கொரோனா தொற்று நோய் பரவலைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சரை அதிமுக சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்று அந்த அறிக்கையில் ஓபிஎஸ் குறிப்பிட்டுள்ளார்.
-மணிகண்டன்








