கொரோனா தொற்று குறைந்து வருவதால், பல்வேறு மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
இந்தியாவில் கொரோனா பரவல் உச்சத்தில் இருந்த மகாராஷ்ட்ரா மாநிலத்தில் தற்போது பாதிப்பு குறையத் தொடங்கியதால் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. தொற்று பாதிப்பு எண்ணிக்கை மற்றும் ஆக்சிஜன் படுக்கைகளின் இருப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு 5 பிரிவுகளாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. குறைந்த பாதிப்பு கொண்ட பகுதிகளில் நாளை மறுநாள் முதல் திரையரங்குகள், வணிக வளாகங்கள், உடற் பயிற்சி நிலையங்கள் மற்றும் புறநகர் ரயிகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளதையொட்டி, ஊரடங்கு கட்டுப்பாடுகளில் அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், தளர்வுகளை அறிவித்துள்ளார். அதன்படி, நாளை மறுநாள் முதல் மெட்ரோ ரயில் சேவை 50 சதவீத பயணிகளுடன் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார் அலுவலகங்கள் 50 சதவீத ஊழியர்களுடனும், அரசு அலுவலகங்களில் குரூப் ஏ பிரிவு அதிகாரிகள் 100 சதவீதத்துடனும், குரூப் பி ஊழியர்கள் 50 சதவீதத்துடனும் பணியாற்ற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் அடுத்த மாதம் முதல் தேதி முதல் பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் பருவம் அக்டோபர் 9ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் தசரா விடுமுறைக்கு பின்னர் அக்டோபர் 21ஆம் தேதி முதல் இரண்டாம் பருவம் தொடங்கும் என்றும் அம்மாநில பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரில் கடைகள் திறக்கும் நேரத்திற்கு விதிக்கப்பட்ட நேரக் கட்டுப்பாட்டில் மேலும் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. பிற்பகல் 3 மணி வரை கடைகளை திறக்க ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மாலை 6 மணிவரை கடைகளை திறக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. .







