ஒடிஷாவில் அமைச்சர்கள் ராஜினாமா – புதிய அமைச்சரவை நாளை பதவியேற்பு

ஒடிஷாவில் முதலமைச்சர் நவீன் பட்நாயக் தலைமையிலான அமைச்சர்கள் அனைவரும் ராஜினாமா செய்துள்ள நிலையில், புதிய அமைச்சரவை நாளை காலை பதவி ஏற்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. முதலமைச்சர் நவீன் பட்நாயக்கின் அமைச்சரவையில் 20…

ஒடிஷாவில் முதலமைச்சர் நவீன் பட்நாயக் தலைமையிலான அமைச்சர்கள் அனைவரும் ராஜினாமா செய்துள்ள நிலையில், புதிய அமைச்சரவை நாளை காலை பதவி ஏற்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

முதலமைச்சர் நவீன் பட்நாயக்கின் அமைச்சரவையில் 20 பேர் அமைச்சர்களாக உள்ளனர். நவீன் கேட்டுக்கொண்டதற்கு இணங்க அமைச்சர்கள் அனைவரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

முழுமையான அமைச்சரவை மாற்றத்திற்கு நவீன் பட்நாயக் திட்டமிட்டிருப்பதன் காரணமாகவே அனைவரும் ராஜினாமா செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஒடிஷாவில் வரும் 2024ம் ஆண்டு சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதை முன்னிட்டு, அமைச்சரவையில் இளம் தலைவர்களுக்கு வாய்ப்புகளை கொடுக்கவும், ஜாதி ரீதியிலான பிரதிநிதித்துவத்தை அமல்படுத்தவும் நவீன் திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

புதிய அமைச்சர்கள் யார் யார் என்ற விவரம் இதுவரை வெளியிடப்படவில்லை. புதிய அமைச்சர்களுக்கு ஆளுநர் கணேஷி லால் நாளை காலை 11.45 மணிக்கு பதவிப் பிரமாணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அமைச்சரவையில் இருந்து விடுபடும் மூத்த தலைவர்களுக்கு கட்சியில் முக்கியப் பொறுப்புகள் வழங்கப்படும் என்றும், வரும் 2024 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்கு ஏற்ப கட்சியை தயார்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கையை ஆளும் பிஜூ ஜனதா தள தலைவரும் முதலமைச்சருமான நவீன் பட்நாயக் மேற்கொண்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.