உச்சத்தில் சமையல் எண்ணெய் விலை!

கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, சமையல் எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. விலை உயர்வு ஏன்? அன்றாட வாழ்க்கையில் இதன்தாக்கம் எப்படி இருக்கும்? என்பதை இத்தொகுப்பில் பார்க்கலாம்.. கச்சா எண்ணெய், கட்டுமான பொருட்கள் விலை…

கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, சமையல் எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. விலை உயர்வு ஏன்? அன்றாட வாழ்க்கையில் இதன்தாக்கம் எப்படி இருக்கும்? என்பதை இத்தொகுப்பில் பார்க்கலாம்..

கச்சா எண்ணெய், கட்டுமான பொருட்கள் விலை உயர்வு என்று விலை ஏற்றம் குறித்து அவ்வப்போது செய்திகள் வருகின்றன. இதனால் அன்றாட வாழ்க்கையில் நாம் எந்த விதத்தில் விலை ஏற்றத்தை சந்திப்போம் என்பது குறித்து உடனடியாக அறிந்து கொள்ள முடியாது.

ஆனால் சமையல் எண்ணெய் விலை உயர்வு என்றதும், தினமும் சாப்பிடும் உணவுதான் கண்முன் வருகிறது அல்லவா… எண்ணெய் இல்லா உணவை தினமும் சமைப்பது குறித்து சிந்தித்தால், அது நமது நாட்டில் சாத்தியமில்லாத ஒன்றாக கூட தெரியலாம்.
நம் நாட்டில் சராசரியாக ஒரு நபருக்கு ஓராண்டுக்கு 19 கிலோ எண்ணெய் தேவைப்படுகிறது. நிலைமை அப்படி இருக்க, கடந்த ஓராண்டாக சமையல் எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நடப்பாண்டு மே மாதத்தில் இதுவரை இல்லாத வகையில், சமையல் எண்ணெய் விலை புதிய உச்சத்தை தொட்டது. கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத விலையேற்றம் என பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.

ஏன் இந்த விலை ஏற்றம்?

உலகிலேயே அதிகளவில் சமையல் எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடாக இந்தியா உள்ளது. அதாவது இந்தியாவில் பயன்படுத்தப்படும் மூன்றில் 2 பங்கு சமையல் எண்ணெய் வெளிநாடுகளில் இருந்து தான் இறக்குமதி செய்யப்பட்டு பயன்படுத்தம் அளவுக்கு நாட்டின் சமையல் எண்ணெய்யின் தேவை அதிகரித்துள்ளது.

கடந்த 2019-2020ம் ஆண்டில் நாட்டின் சமையல் எண்ணெய்யின் தேவை என்பது 24 மில்லியன் டன்னாக இருந்தது. உள்நாட்டு உற்பத்தி மூலமாக கிட்டத்தட்ட 10.65 மில்லியன் டன் தேவையை பூர்த்தி செய்ய முடிந்தது. ஆனால் மீதமுள்ள 13 மில்லியன் டன் சமையல் எண்ணைக்கு வெளிநாடுகளையே எதிர்பார்க்க வேண்டிய நிலை இருந்தது

இதனை அடுத்து, சுமார் 61 ஆயிரத்து 560 கோடி ரூபாய்க்கு, 13.35 மில்லியன் டன் மதிப்பிலான எண்ணெய்யை மத்திய அரசு வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்தது.

SOLVENT EXTRACTORS ASSOCIATION OF INDIA எனப்படும் (SEA )அமைப்பின் சமீபத்திய தரவுளின் படி, கடலை எண்ணெய் விலை கடந்த ஓராண்டில் மட்டும் 20 சதவீதம் உயர்ந்துள்ளது. கடுகு எண்ணெய் விலை 50 சதவீதமும், வனஸ்பதியின் விலை 45 சதவீதமும், சூரிய காந்தி எண்ணெய் மற்றும் பாமாயில் விலை 60 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளன.

தரம் பிரிக்கப்படாத, அதாவது crude பாமாயிலை எடுத்துக்கொண்டால், தங்கம், கச்சா எண்ணெய்க்கு பிறகு அதிகம் இறக்குமதி செய்யப்படும் பொருள் இதுதான். இந்தோனேசியா மற்றும் மலேசியாவில் இருந்து பாமாயில் இறக்குமதி செய்யப்படுகிறது.

கொரோனா பாதிப்பின் ஏதிரொலி

ஆனால், மலேசியாவில் எண்ணெய் உற்பத்தியில் ஈடுபடும் தொழிலாளர்களில் பலர் வங்கதேசம் போன்ற நாடுகளை சேர்ந்தவர்கள். கொரோனா பாதிப்பு எதிரொலியாக, மலேசியாவில் பெருமளவு தொழிலாளர்கள் பணிக்கு வராததும், இந்த விலை ஏற்றத்துக்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது.

ரஷ்யா மற்றும் உக்ரைனில் இருந்து, ஆண்டுதோறும் கிட்டதட்ட 2.5 மில்லியன் டன் சூரியகாந்தி எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்கிறது. சமீப காலங்களில் அந்நாடுகளில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டதன் விளைவாக எண்ணெய் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டதால், விலை ஏற்றம் ஏற்பட்டது.

நாம் கடைக்கு சென்று ஒரு லிட்டர் கடுகு எண்ணெய் வாங்கினால், அதன் விலை தற்போது 170 ரூபாயாக இருக்கும். ஆனால், ஓராண்டுக்கு முன்பு அது 120 ரூபாயாக இருந்தது. எனவே 50 ரூபாய் விலை ஏற்றத்தை நேரடியாக ஓராண்டில் வாடிக்கையாளர்கள் சந்திக்கின்றனர்.

ஆனால், இதோடு எண்ணெய் விலை ஏற்றம் முடிவதில்லை. மறைமுகமாகவும் நாம் இதன் தாக்கத்தை சந்தித்துக்கொண்டு தான் இருக்கிறோம். சமையல் எண்ணெய் விலை உயர்வால் ஹோட்டல் உணவுகள், சோப்புகள், பேக்கரி பொருட்கள், வாசனை திரவியங்கள் என பல்வேறு பொருட்களின் விலை உயர்விலும் இந்த தாக்கம் எதிரொலிக்கிறது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடைபெறுவதுபோல் தொடர்ந்து சமையல் எண்ணெய் விலையும் கண்ணுக்கு தெரியாமல் உயர்ந்துவருகிறது. தொடர் விலை ஏற்றம் காரணமாக, சமையல் எண்ணெய் இறக்குமதிக்கான வரியை குறைக்க மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த செய்தி தொகுப்பை வீடியோவாக காண கீழே கிளிக் செய்யுங்கள்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.