பிரபல பாலிவுட் நடிகை மினிஷா லம்பா தனது விவாகரத்து குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் மனம் திறந்து பதிலளித்துள்ளார்.
கடந்த 2005ம் ஆண்டு யஹான் (Yahaan) என்னும் இந்தி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் மினிஷா லம்பா. தொடர்ந்து ஹனிமூன் டிராவல்ஸ் பிரைவேட் லிமிடெட், பச்னா ஏ ஹசீனோ, வெல்டன் அப்பா, பேஜா ஃப்ரை போன்ற பல படங்களில் நடித்து பாலிவுட் திரையுலகில் பிரபலமானார். பின்னர் கடந்த 2015ம் ஆண்டு ரையன் தாம் (Ryan Tham) என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். ஆனால் கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இருவரும் விவாகரத்து செய்துகொண்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில் தற்போது தனது விவாகரத்து குறித்து, தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் மனம் திறந்து பேசியுள்ளார் பாலிவுட் நடிகை மினிஷா. அதில், “நமது இந்திய சமூகத்தில் விவாகரத்து என்பது மரியாதைக் குறைவான ஒன்றாக பார்க்கப்படுகிறது. மேலும் திருமண உறவில் பெண்களுக்கு மட்டுமே அதிக பொறுப்புகளும் உறவை காப்பாற்ற வேண்டிய கடைமையும் இருப்பதாக சித்தரிக்கப்பட்டுள்ளது. ஆனால் இப்பொழுது காலம் மாறிவிட்டது, ஒரு பெண்ணிற்கு திருமண உறவில் சரியான அங்கீகாரமும் கிடைக்கவில்லை என்றால் விவாகரத்து செய்யலாம். விவாகரத்து செய்வது என்பது எளிதானது அல்ல, ஆனால் பிடிக்காத கணவருடன் வாழ்வதை விட திருமண உறவில் இருந்து விலகுவதே சரியான தேர்வாக இருக்கும். திருமணம் என்பது வாழ்வில் முக்கியமானதுதான் ஆனால் அது மட்டுமே பெண்களின் முழு வாழ்க்கை இல்லை” என்று தெரிவித்துள்ளார்.
