இந்தியாவில் மத நல்லிணக்கத்தை சீர்குலைப்பதற்குப் பதிலாக இந்துக்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், அகமதியாக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் துன்புறுத்தப்படுவதை பாகிஸ்தான் தடுத்து நிறுத்த வேண்டுமென என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் பதிலடி கொடுத்துள்ளது.
நபிகள் நாயகம் குறித்த சர்ச்சை கருத்துக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தான், குவைத், கத்தார், சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தின.
இதுகுறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட விளக்க அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
சிறுபான்மையினர் உரிமைகளை தொடர்ச்சியாக ஒடுக்குபவர்கள், அடுத்த நாட்டில் சிறுபான்மை சமூகத்தினரை எவ்வாறு நடத்துவது என்பது குறித்து கருத்து தெரிவிப்பது வேடிக்கையானது. பாகிஸ்தானில் இந்துக்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், அகமதியாக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் துன்புறுத்தப்படுவதற்கு உலகமே சாட்சியாக உள்ளது. இந்திய அரசை பொறுத்தவரை அனைத்து மதங்களுக்கும் உரிய உயர்ந்த மரியாதையை அளிக்கிறது.
ஆனால் பாகிஸ்தானில் மத வெறியர்களை புகழ்வதும், அவர்களுக்கு நினைவுச் சின்னங்களும் கட்டப்படுகின்றன. எனவே, இந்தியாவின் மத நல்லிணக்கத்தை கெடுக்கும் முயற்சியை விடுத்து, பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மை சமூக மக்களின் பாதுகாப்பு, நாட்டின் பாதுகாப்பு மற்றும் மக்களின் நல்வாழ்வுக்கான காரியங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, முகமது நபிகள் குறித்த பாஜகவின் செய்தித் தொடர்பாளர்களின் அவதூறு பேச்சு உலகின் ஒட்டுமொத்த இஸ்லாமியர்களின் மனதையும் புண்படுத்தும் வகையில் இருப்பதாக பாகிஸ்தானின் வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது.
இதனிடையே, இதே விவகாரத்தில் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (ஓஐசி) இந்தியாவை கடுமையாக விமர்சித்தது. அந்த விமர்சனத்துக்கு வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் அரிந்தம் பாக்சி பதிலடி கொடுத்துள்ளார்.
இகுறித்து அவர் கூறுகையில், “இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் கருத்து தேவையற்றது மற்றும் குறுகிய மனப்பான்மை கொண்டதாகும். அதன் கருத்தை இந்திய அரசு நிராகரிக்கிறது. சிலர் தனிப்பட்ட கருத்துக்களை தெரிவித்தனர். அத்தகைய கருத்துகள் இந்திய அரசின் கருத்தாக எடுத்துக் கொள்ளப்படக் கூடாது. அத்தகைய கருத்தை தெரிவித்தவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுவிட்டது” என்று அரிந்தம் பாக்சி தெரிவித்தார்.
-மணிகண்டன்








