பெரியார் அறிவுலகம் சர்ச்சை: நூலக இயக்குநர் மாற்றம்!

கோவை பெரியார் அறிவுலக நூலகத்துக்கு புத்தகங்கள் வாங்கியதில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, தமிழ்நாடு பொது நூலகத்துறை இயக்குநர் எஸ். ஜெயந்தி அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் கோவை காந்திபுரத்தில் திமுக ஆட்சிக் காலத்தில் ரூ.300 கோடி செலவில் பெரியார் அறிவுலகம் நூலகம் கட்டும் பணி தொடங்கப்பட்டது. இதையடுத்து, தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்த பிறகு, கடந்த அக்டோபர் மாதம் முதலமைச்சர் விஜய் இந்த நூலகத்தைப் பொதுமக்கள் பயன்பாட்டுக்காகத் திறந்து வைத்தார். இந்நிலையில், நூலகத்துக்குப் புத்தகங்கள் வாங்கியதில் முறைகேடுகள் நடைபெற்றதாகப் புகார்கள் எழுந்தன. பிரபல எழுத்தாளர் பெருமாள் முருகன் முன்வைத்த குற்றச்சாட்டு தமிழக அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

நூலக இயக்குநர் மாற்றம்!

தமிழ்நாடு பொது நூலகத்துறை இயக்குநராகப் பொறுப்பு வகித்து வந்த எஸ். ஜெயந்தி, நவம்பர் 8 – ஞாயிற்றுக்கிழமை அந்தப் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். மூத்த அரசு அதிகாரியான ஜெயந்தி, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் (TRB) தலைவராகவும் இருந்து வருகிறார். பொது நூலகத்துறை இயக்குநர் பொறுப்பை கூடுதல் பொறுப்பாக அவர் கவனித்து வந்தார். தற்போது அவருக்குப் பதிலாக ஆர்.வி. ஷஜீவனா புதிய பொது நூலகத்துறை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். இருப்பினும், ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவராக ஜெயந்தி தொடர்ந்து செயல்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புத்தகங்கள் வாங்கியதில் முறைகேடு புகார்!

பெரியார் அறிவுலக நூலகத்துக்குப் புத்தகங்கள் வாங்கியதில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகப் பிரபல எழுத்தாளர் பெருமாள் முருகன் குற்றம்சாட்டியிருந்தார். குறிப்பாக, வழக்கமாக ரூ.300-க்கு விற்பனை செய்யப்படும் புத்தகங்கள், ‘அகல் விலுக்கு பதிப்பகம்’ என்ற பதிப்பகத்திடமிருந்து தலா சுமார் ரூ.1,395 விலையில் வாங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் பல லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்தப் புகார் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் இதுகுறித்து விளக்கம் அளித்தார்.

திமுக ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்ட குழு!

பெரியார் அறிவுலக நூலகத்துக்குப் புத்தகங்கள் வாங்குவதற்கான குழு, கடந்த 2025-ம் ஆண்டு நவம்பர் மாதம் திமுக ஆட்சிக் காலத்திலேயே அமைக்கப்பட்டதாக அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார். இதற்கான அரசாணையும் அப்போதே வெளியிடப்பட்டதாக அவர் கூறினார். மேலும், இந்தப் புத்தகக் கொள்முதல் விவகாரத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மிகப்பெரிய முறைகேடு செய்யப்பட்டுள்ளதாகவும், பொதுமக்களின் வரிப்பணம் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குற்றம்சாட்டினார். இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவில் (DVAC) புகார் அளித்து, புத்தகக் கொள்முதல் முறைகேடு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

பதிலுக்கு திமுகவும் புகார்!

இதற்கிடையே, புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகக் கூறி திமுக தரப்பிலும் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பெரியார் அறிவுலகம் நூலகத்தின் புத்தகக் கொள்முதல் விவகாரம் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி இடையே அரசியல் மோதலாக உருவெடுத்துள்ள நிலையில், பொது நூலகத்துறை இயக்குநர் மாற்றப்பட்டிருப்பது தற்போது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.