அரசு ஊழியர் 48 மணிநேரம் சிறையில் அடைக்கப்பட்டால், இடைநீக்கம் செய்ய தனியாக உத்தரவு பிறப்பிக்க வேண்டாம் – உச்சநீதிமன்றம்!

அரசு ஊழியர் கைது செய்யப்பட்டு 48 மணி நேரத்திற்கும் மேலாகக் காவலில் வைக்கப்பட்டால் இடைநீக்கம் செய்ய தனியாக உத்தரவு பிறப்பிக்க தேவையில்லை என்று உச்ச நீதிமன்றம் விளக்கமளித்துள்ளது.

கைது செய்யப்பட்டு 48 மணி நேரத்திற்கும் மேலாக காவலில் வைக்கப்படும் அரசு ஊழியர் ‘தற்காலிகப் பணி இடைநீக்கத்தின்’ கீழ் இருப்பதாகக் கருதப்படுவதாகவும், இதற்கென குறிப்பிட்ட உத்தரவு தேவையில்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பீகார் மாநிலம் சமஸ்திபூரில் உள்ள சதர் மருத்துவமனை மேலாளர் ரூ.4 ஆயிரம் லஞ்சம் பெற்ற புகாரையடுத்து அவருக்கு எதிரக ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த அமர்வு நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்டவர் பெற்ற தொகை அற்பமானது என தெரிவித்து ஜாமீன் வழங்கியது.

அந்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு விசாரித்த பாட்னா உயர்நீதிமன்றம், மேலாளரின் ஜாமீனை ரத்து செய்து உத்தரவிட்டது. அந்த உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவானது உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ஜெ.பி. பர்திவாலா, மன்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், குற்றம் சாட்டப்பட்டவர் கிட்டத்தட்ட 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் இருந்ததாகத் தெரிகிறது. ஆனால் தன்னை பணியிடை நீக்கம் செய்ததாக உத்தரவு பிறப்பிக்கவில்லை என கூறுவதை ஏற்க முடியாது. ஏனெனில் ஒரு அரசு ஊழியர் கைது செய்யப்பட்டு 48 மணி நேரத்திற்கும் மேலாக நீதிமன்றக் காவலில் இருந்தால், அவர் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டதாகக் கருதப்படுவார். அவர் ஒரு அரசு ஊழியர் என்பதால், அவர் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டதாகக் கூறலாம், அது தொடர்பாக எந்தவொரு குறிப்பிட்ட உத்தரவும் பிறப்பிக்கத் தேவையில்லை என தெரிவித்தது.

மேலும் இந்த வழக்கில், ஜாமீன் வழங்குவதா? இல்லையா? என்பதைத் தீர்மானிக்கும் நோக்கத்திற்காக, லஞ்சத் தொகையின் அளவு ஒரு பொருத்தமான காரணி அல்ல என்று உயர் நீதிமன்றம் கூறியிருப்பது சரியாக இருந்தாலும், ஒரு ஆண்டுக்கு பின்னர் குற்றம் சாட்டப்பட்டவரின் ஜாமீனை ரத்துசெய்த நடைமுறை சரியானது அல்ல என தெரிவித்து, பாட்னா உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தது.

அதேவேளையில், பணியிடை நீக்க உத்தரவு ரத்து செய்யப்பட்ட பின்னர் குற்றம்சாட்டப்பட்ட நபரை மீண்டும் அதே மருத்துவமனையில் மேலாளர் பதவியில் பணியமர்த்தப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிப்பதாகவும், எனவே இந்த விவகாரம் குறித்து அரசு விசாரணை நடத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.