இந்தியாவின் முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது குடும்பத்தினர் உட்பட மொத்தம் 14 பேருடன் கோவை சூலூர் விமானப்படை தளத்திலிருந்து வெலிங்டன் நோக்கி சென்ற எம்.ஐ ரக ஹெலிகாப்டர், நீலகிரியில் குன்னூர் பகுதியை கடக்கும் போது எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கியது. யாரும் நினைத்துக்கூடப் பார்க்காத இந்த விபத்தில் முப்படை தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.
ராணுவத்தின் முக்கிய அதிகாரி பிபின் ராவத் உயிரிழந்தது நாட்டு மக்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் விபத்து எப்படி நடந்தது, விபத்துக்குக் காரணம் என்ன? எனப் பல கேள்விக் கணைகளை பொதுமக்கள் எழுப்பி வருகின்றனர். நாட்டையே உலுக்கிய இந்த கோர விபத்தைப் பார்க்கும் நேரத்தில் இதுவரை இந்தியாவில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்துகள் குறித்து விளக்குகிறது இந்த தொகுப்பு.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்தியாவின் ஹெலிகாப்டர் விபத்துகளில் மிக சமீபத்திய விபத்து கடந்த நவம்பர் மாதம் அருணாச்சல பிரதேசத்தில் நிகழ்ந்த விபத்தாகும். 2 விமானி உட்பட மொத்தம் 5 பேருடன் எம்.ஐ 17 ரக ஹெலிகாப்டர் அருணாச்சலப் பிரதேசத்தில் ஹெலிபேடில் தரையிறங்க முயற்சித்த போது எதிர்பாராத விதமாக மலைப்பகுதியில் தரையிறங்கியது. ஆனால், விமானி சாதுர்யமாக செயல்பட்டு ஹெலிகாப்டரை மலைகளின் நடுவே குறைந்த வேகத்தில் இறங்கச் செய்தார்.
இதற்கு முன்னதாக நடப்பு ஆண்டு மே மாதம் நடந்த ஒரு விபத்தில் இந்திய விமானப்படை விமானி அபினவ் சௌத்ரி என்பரின் உயிரினை காவு வாங்கியது. பஞ்சாப் மாநிலத்தின் பாகபுரானாவின் லாங்கியானா குர்த் கிராமத்தில் வழக்கம் போல பயிற்சி பணிகளில் MiG-21 ரக ஹெலிகாப்டர் ஈடுபட்டிருந்தது. அப்போது நள்ளிரவு 1 மணியளவில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. நடந்த இந்த விபத்தில் அபினவ் சௌத்ரி என்ற விமானி உயிரிழந்தார். உடன் சென்ற மற்றொரு விமானி அதிர்ஷ்டவசமாகக் காயங்களுடன் உயிர் தப்பினார். விசாரணையில் நடந்த இந்த விபத்துக்கு அதிக மழைப் பொழிவே காரணம் என தெரிய வந்தது.
இதற்கு முன்பான குறிப்பிடத்தக்க விபத்து என்றால் அது 2019ம் ஆண்டு பிப்ரவரி 27ம் தேதி நிகழ்ந்த விபத்துதான். அன்றைய தேதியில் நண்பகல் 1 மணியளவில் யூரோகாப்டர் AS350 B3e ஆறு பயணிகள் மற்றும் ஒரு விமானியுடன், தப்லேஜங்கில் உள்ள
பதிபார தேவி கோயிலிலிருந்து நேபாளத்தின் தெஹ்ராத்தமில் உள்ள சுஹந்தண்டாவுக்கு புறப்பட்டது. விமானம் தரையிலிருந்து மேலெழுந்த சில நொடிகளிலேயே மோசமான வானிலை காரணமாக தரையில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் நேபாள சுற்றுலா மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ரவீந்திர பிரசாத் அதிகாரி உட்பட 7 பேரும் உயிரிழந்தனர்.
2019ம் ஆண்டுக்கு முன்பு அதிகம் பேசப்பட்ட பெரும் விபத்து என்றால் அது 2017ம் ஆண்டு ஆகஸ்ட் 23ம் தேதி நடந்தேறிய விபத்துதான். சம்பவத்தன்று காலை 6 மணியளவில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக விமானப்படை தெரிவித்தது. இந்திய சீன எல்லைப்பகுதியான யாங்சே ராணுவ முகாமிற்கு ஹெலிகாப்டரில் மண்ணெண்ணெய் கொண்டு சென்று கொண்டிருந்த போது நடுவானில் மண்ணெண்ணெய் பேரல்களில் ஒன்று திறந்து தீ விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக ஹெலிகாப்டர் 17,000 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்து நொறுங்கியது. இந்த சம்பவத்தில் விமானி, துணை விமானி, விமானப் பொறியாளர் மற்றும் இரண்டு ராணுவ அதிகாரிகள் உயிரிழந்தனர்.
2013ம் ஆண்டு ஜூன் 25 உத்தரகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின் போது எம்.ஐ 17 வி5 ஹெலிகாப்டர் மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்தது. அப்போது திடீரென ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் மொத்தமாக 20 பேர் உயிரிழந்தனர். நடந்த விபத்தானது மக்களுக்கு உதவிய நேரத்தில் நேர்ந்ததால் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
என்னதான் ஹெலிகாப்டர்கள் அனைத்தும் மிக பாதுகாப்புடன், பல கட்ட பரிசோதனைகளுக்குப் பிறகு இயக்கப்பட்டாலும் எதிர்பாராது நடக்கும்
சில விபத்துக்கள் அனைத்து பரிசோதனைகளையும், தரத்தையும் பற்றியும் சந்தேகிக்கச் செய்துவிடுகிறது. மழை, இயற்கை சீற்றங்கள் போன்ற காரணங்களுடன் காலாவதியான என்ஜின்கள், விமானிகளுக்கு போதிய பயிற்சியின்மை, பராமரிப்பின்மை. உதிரி பாகங்கள் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் இதுபோன்ற விபத்துக்கு காரணமாக கூறப்படுகிறது.
கட்டுரையாளர்: யுவராம் பரமசிவம்