விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரிலிருந்து கருப்புப் பெட்டி கண்டெடுக்கப்பட்டுள்ளது.
குன்னூரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 13 வீரர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
விபத்தில் உயிரிழந்த வீரர்களின் உடல்கள் வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன. கோவையில் இருந்து வந்த மருத்துவ குழுவினர் உடல்களை பிரேத பரிசோதனை மேற்கொண்டனர்.
இந்நிலையில், விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு இன்று காலை வெலிங்டன் பயிற்சி கல்லூரி மைதானத்தில் ராணுவ மரியாதை செலுத்தப்படுகிறது.
இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடல் படை தளபதி அட்மிரல் ஹரிகுமார், விமானப்படை தளபதி சவுதரி, ராணுவ தளபதி நரவின ஆகிய முப்படை தளபதிகள் இறுதி மரியாதை செலுத்துகின்றனர்.
அதன்பின் தனித்தனி ராணுவ வாகனங்களில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் உடல்களை சூலூர் வரை கொண்டு சென்று சூலூரில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லி கொண்டு செல்லப்படுகிறது.
சூலூர் விமான படை தள அதிகாரிகள் நேற்று இரவு சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்ட நிலையில் கருப்பு பெட்டி நேற்று இரவு கண்டெடுக்கப்பட்டுள்ளது.








