தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “2001 ஆம் ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி குஜராத் மாநில முதலமைச்சராகப் பொறுப்பேற்று தனது நிர்வாகப் பயணத்தைத் தொடங்கிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து 25 ஆண்டுகளாக அரசின் தலைமைப் பொறுப்பில் மக்கள் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்க சாதனையாகும்.
2001 முதல் 2014 வரை குஜராத் மாநில முதலமைச்சராகவும், அதனைத் தொடர்ந்து 2014 முதல் இந்தியாவின் பிரதமராகவும் நாட்டிற்குப் பணியாற்றி வரும் அவர், தற்போது மூன்றாவது முறையாகத் தொடர்ந்து இந்தியப் பிரதமர் பொறுப்பை வகித்து வருகிறார்.
அரசின் தலைமைப் பொறுப்பில் 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள இத்தருணத்தில், பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு எனது சார்பிலும், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பிலும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டு மக்களின் நலனுக்காகவும், இந்தியாவின் வளர்ச்சிக்காகவும் அவர் மேற்கொள்ளும் மக்கள் பணி மேலும் பல ஆண்டுகள் தொடரவும், நல்ல உடல்நலத்துடனும் நீண்ட ஆயுளுடனும் தொடர்ந்து நாட்டிற்குச் சேவையாற்றவும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




