ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மீது FIR – ஆகாஷ்வாணி ஊழியர்கள் புகார்!

ஆகாஷ்வாணி அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்த இந்தியா கூட்டணி எம்.பி க்கள் மீதும் FIR பதிவு செய்யப்பட்டது.

SIR விவகாரம், வாக்குத் திருட்டு, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகல் ஆகியவற்றை வலியுறுத்தி டெல்லியில் தேர்தல் ஆணைய அலுவலகத்தை நோக்கி INDIA கூட்டணி எம்.பி.க்கள் பேரணியாகச் செல்ல முயன்றனர். ஆனால், தேர்தல் ஆணைய அலுவலகம் அருகே போலீசார் அவர்களைத் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து, நாடாளுமன்றத்திற்கு அருகே உள்ள ஆகாஷ்வாணி அலுவலக வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராகுல் காந்தியும் நண்பகலில் ஆகாஷ்வாணி அலுவலகத்துக்குள் சென்று போராட்டத்தில் கலந்து கொண்டார். முன்னதாக, நாடாளுமன்றத்திலிருந்து தேர்தல் ஆணைய அலுவலகம் நோக்கி நடைபெற்ற பேரணியின்போது, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வாக்குத்திருட்டு குறித்து முழக்கமிட்டனர். அப்போது ராகுல் காந்தி தடுப்புகளைத் தாண்டி மேலே ஏறினார்.

பிரியங்கா காந்தி , தேசியவாத காங்கிரஸ் கட்சி (NCP-SP) எம்.பி. சுப்ரியா சுலே உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்களும் இந்தப் பேரணியில் பங்கேற்றனர். நாடாளுமன்றம் மற்றும் தேர்தல் ஆணைய அலுவலகத்தைச் சுற்றி பலத்த தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்த நிலையில், நிதி ஆயோக் அலுவலகம் அருகே போலீசார் எம்.பி.க்களை தடுத்து நிறுத்தினர்.

இதனிடையே, ஆகாஷ்வாணி அலுவலக வளாகத்தில் நீண்ட நேரம் போராட்டம் நடைபெற்றது. பின்னர் ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் எம்.பி.க்களை போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். சுமார் 8 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற போராட்டத்துக்குப் பிறகு ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் இரவு 10 மணியளவில் விடுவிக்கப்பட்டதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.

இந்த விவகாரங்களை முன்வைத்தே எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், தற்போது ஆகாஷ்வாணி அலுவலகத்துக்குள் நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்டதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் மீது FIR பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களுடன் வந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.