“வடமாநில சிறுமி பாலியல் வன்கொடுமை; பொறுப்பற்ற தவெக ஆட்சி!” – கனிமொழி கண்டனம்!

திருவொற்றியூர் அருகே வடமாநில சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளுக்கு சட்டப்படி கடுமையான தண்டனை கிடைப்பதையும் அரசு உறுதி செய்ய வேண்டும் என்று கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி வெளியிட்டுள்ள தனது எக்ஸ் தளப் பதிவில், “சென்னை திருவொற்றியூர் அருகே வடமாநில தம்பதியின் 5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

கடந்த 5 மாதங்களாக இதுபோன்ற சம்பவங்கள் குறித்தும், பொறுப்பற்ற தவெக ஆட்சியில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டு மக்களை எண்ணியும் மனம் வருந்துகிறது.

வீண் விளம்பரத்திற்காக ஒரு சினிமாத்தனமான சிறப்புப் படையை உருவாக்கியதைத் தவிர, குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்க இந்த அரசு எடுத்துள்ள நடவடிக்கை என்ன?

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உரிய மருத்துவ மற்றும் சட்ட உதவிகளை வழங்குவதோடு, அவருக்கு நீதி கிடைப்பதையும், குற்றவாளிகளுக்கு சட்டப்படி கடுமையான தண்டனை கிடைப்பதையும் அரசு உறுதி செய்ய வேண்டும்” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.