துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் அரசுக்கே என்பதில் உறுதி தேவை – அன்புமணி!

துணைவேந்தர்களை தமிழக அரசே நேரடியாக நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “தமிழ்நாட்டில் காலியாக உள்ள அரசு பல்கலைக்கழகங்களுக்கு தற்காலிக துணை வேந்தர்களை நியமிக்கக் கூடாது என்றும், முழுநேர துணை வேந்தர்களை நியமிப்பதற்கான தேடல் குழுக்களில் பல்கலைக்கழக மானியக் குழுவின் பிரதிநிதியையும் சேர்க்க வேண்டும் ஆளுனர் ஆர்.வி. அர்லேகர் வலியுறுத்தியுள்ளார். தமிழக அரசு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை அரசுக்கு வழங்கி சட்டம் இயற்றப் பட்டுள்ள நிலையில், தேடுதல் குழுவின் தன்மையை தீர்மானிக்க ஆளுனர் அழுத்தம் தருவதை ஏற்க முடியாது.

தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு நேற்று எழுதியக் கடிதத்தில் இந்தக் கருத்துகளை வலியுறுத்தி உள்ள ஆளுனர், இந்த சிக்கலுக்கு இருதரப்பு கலந்தாய்வு மற்றும் ஒத்துழைப்பின் மூலம் தீர்வு காண முடியும் என்றும், தாம் பரிந்துரைத்தவாறு தேடல் குழு அமைக்கப்படுவதற்கு முதலமைச்சர் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருக்கிறார். ஆளுனரின் நிலைப்பாட்டில் புதிதாக எதுவும் இல்லை. 2023ஆம் ஆண்டு செப்டம்பர் 6, 2025ஆம் ஆண்டு மார்ச் 11, 2026ஆம் ஆண்டு பிப்ரவரி 2 ஆகிய தேதிகளில் அப்போதைய ஆளுனர் ஆர்.என்.இரவி கூறியதைத் தான் இப்போதைய ஆளுனர் இப்போது தெரிவித்துள்ளார். இது துணை வேந்தர் நியமன சிக்கலுக்கு தீர்வு காண்பதற்கு பதிலாக, இந்த சிக்கலை மூன்று ஆண்டுகள் பின்னோக்கி இழுத்துச் செல்லும் முயற்சியாகும். இதில் அரசு ஒருபோதும் சிக்கிக் கொள்ளக் கூடாது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 2025ஆம் ஆண்டு ஏப்ரல் 8ஆம் தேதி வரை, தேடல் குழுவால் பரிந்துரை செய்யப்படும் மூவரில் இருந்து ஒருவரை தேர்வு செய்து துணை வேந்தராக நியமிக்கும் அதிகாரம் பல்கலைக் கழக வேந்தரான ஆளுனருக்கு அளிக்கப்பட்டிருந்தது. அதே நேரத்தில் 3 பேர் கொண்ட தேடல் குழுவில் தமது பிரதிநிதி ஒருவரை நியமிக்கும் அதிகாரம் மட்டும் தான் ஆளுனருக்கு உண்டே தவிர, ஒட்டுமொத்த தேடல் குழுவையும் தீர்மானிக்கும் அதிகாரம் ஆளுனருக்கு வழங்கப்படவில்லை. ஆனால், இதுதொடர்பான பல்கலைக்கழக சட்டங்களை மதிக்காமல், துணைவேந்தர்கள் தேடல் குழுவில் பல்கலைக்கழக மானியக் குழு பிரதிநிதியையும் சேர்க்க வேண்டும் என்று ஆளுனர் ஆர்.என். இரவி வலியுறுத்தியது மட்டுமின்றி, சென்னை பல்கலைக்கழகம் உள்ளிட்ட 3 பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்க, பல்கலைக்கழக மானியக் குழு பிரதிநிதியை உள்ளடக்கிய போட்டி தேடல் குழுவை 06.09.2023 ஆம் நாள் அறிவித்தார்.

அதற்கு முன்பாகவே துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பாக ஆளுனருடன் ஏற்பட்ட மோதல் காரணமாக பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை ஆளுனரிடமிருந்து பறித்து அரசுக்கு வழங்கும் வகையில் 10 சட்டங்கள் 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டன. அவற்றுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுனர் மறுத்த நிலையில் உச்சநீதிமன்றமே தலையிட்டு, அச்சட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கி 08.04.2025ஆம் நாள் தீர்ப்பளித்தது. அதனால், துணைவேந்தர்களை நியமிக்கும் விஷயத்தில் ஆளுனருக்கு எந்த அதிகாரமும் இல்லை. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இன்னும் இறுதித் தீர்ப்பு வரவில்லை.

இத்தகைய சூழலில் தமிழக பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் எவ்வாறு நியமிக்கப்பட வேண்டும்? தேடல் குழு எவ்வாறு அமைக்கப்பட வேண்டும்? என்பது குறித்து ஆலோசனை வழங்கவோ, ஆணை பிறப்பிக்கவோ ஆளுனருக்கு அதிகாரம் இல்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஒவ்வொரு பல்கலைக்கழகத்திற்கு தனித்தனிச் சட்டங்கள் உள்ளன. அவற்றின் அதனடிப்படையில் மட்டும் தான் தேடல் குழுவை அமைக்க முடியும். அரசின் பிரதிநிதி, ஆளுனரின் பிரதிநிதி, பல்கலைக்கழக பிரதிநிதி என மூவரை மட்டுமே தேர்வுக் குழுவில் சேர்க்க பல்கலைக்கழக சட்டங்களில் வகை செய்யப்பட்டுள்ளது. அதையும் மீறி பல்கலைக்கழக மானியக் குழு உறுப்பினரையோ, வேறு உறுப்பினரையோ சேர்ப்பது சட்டவிரோதம். அதை அனுமதிக்க முடியாது.

இந்த சட்டங்களின் மூலமும், புதிதாக இயற்றப்பட்ட துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான சட்டத்தின் மூலமும் அரசுக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை தவெக அரசு உணரவில்லை. துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை அரசுக்கு வழங்கி இயற்றப்பட்ட சட்டங்களை எதிர்த்து தொடரப்பட்டு, உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக விசாரணைக்கு கொண்டு வந்து, சாதகமானத் தீர்ப்பைப் பெற்றாலே இந்த சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண முடியும். ஆனால், அதை செய்வதற்கு பதிலாக ஆளுனரிடம் பேச்சு நடத்தி இந்த சிக்கலுக்கு தீர்வு காண முயல்வதாக அறிவித்ததாலும், பல்கலைக்கழக சட்டங்களுக்கு எதிரான வகையில், பல்கலைக்கழக மானியக் குழுவின் பிரதிநிதியையும் சேர்த்து தேடல் குழு உறுப்பினர்கள் எண்ணிக்கையை ஐந்தாக உயர்த்த தயாராக இருப்பதாகவும் அரசு கூறியது தான் சிக்கலுக்குக் காரணம்.

தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 21 பல்கலைக்கழகங்களில் 19 பல்கலைக்கழகங்களில் முழுநேர துணை வேந்தர்கள் இல்லாத நிலையில், புதிய துணைவேந்தர்களை விரைந்து நியமிக்க வேண்டியது அவசியம் ஆகும். அதேநேரத்தில் தமிழக பல்கலைக்கழக வளர்ச்சிக்கு எந்த வகையிலும் பங்களிக்காத பல்கலைக்கழக மானியக் குழு பிரதிநிதியை மாநில பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர் நியமன நடைமுறையில் உள்நுழைப்பது தேவையில்லாத சிக்கல்களை ஏற்படுத்தும். துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு மட்டுமே உண்டு என்பதில் தமிழக அரசு உறுதியாக இருக்க வேண்டும். இதில் பின்வாங்கவே கூடாது.

எனவே, துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான விவகாரத்தில் ஆளுனரின் ஆலோசனைகளை ஏற்கக் கூடாது. தேடல் குழுவில் பல்கலைக்கழக மானியக் குழு பிரதிநிதியை சேர்க்கக் கூடாது. மாறாக, அடுத்த வாரம் சென்னை உயர்நீதிமன்றத்தில் இறுதி விசாரணைக்கு வரவுள்ள துணைவேந்தர்கள் நியமன வழக்கை விரைவாக முடித்து, துணைவேந்தர்களை தமிழக அரசே நேரடியாக நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.