தமிழக அரசு நீதிமன்ற உத்தரவுக்கு மதிப்பளிக்க வேண்டும் – அண்ணாமலை!

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் பிடிவாதத்தை கைவிட்டு நீதிமன்ற உத்தரவுக்கு மதிப்பளியுங்கள் என்று தமிழக அரசுக்கு அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

வீ த லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை, வேண்டுமென்றே அவமதித்த தவெக அரசிற்கு உச்ச நீதிமன்றம் இன்று கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு என்பது அரசு பேச்சுவார்த்தை நடத்துவதற்கான அழைப்பு அல்ல என்றும், நீதிமன்றம் அதை மாற்றியமைக்கும் வரை அந்த உத்தரவு மாநில அரசு, அதன் அதிகாரிகள் மற்றும் சட்டத்தின் கீழ் செயல்படும் அனைத்து அமைப்புகளையும் மத நிறுவனங்களையும் கட்டுப்படுத்தும் என்றும் உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

மேலும், நீதிமன்ற உத்தரவை மீற முயன்ற திருப்பரங்குன்றம் கோவில் அறங்காவலர் குழுவை இடைநீக்கம் செய்துள்ள உச்ச நீதிமன்றம், நாளை (நவம்பர் 28) மத்திய ரிசர்வ் காவல் படை (CRPF) பாதுகாப்புடன் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிட்டுள்ளது. அத்துடன், மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் பக்தர்கள் அனைவரும் தீபம் ஏற்றவும் அனுமதி வழங்கியுள்ளது.

இனியாவது நீதிமன்ற உத்தரவுகளை மீறும் முயற்சிகளைத் தவெக அரசு கைவிடும் என்றும், எல்லாவற்றிற்கும் மேலாகத் தமிழகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான முருக பக்தர்களின் நம்பிக்கையுடனும் பக்தியுடனும் விளையாடுவதை நிறுத்திக்கொள்ளும் என்றும் மனதார நம்புகிறேன்.
ஆட்சியில் இருப்பவர்களின் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப சட்டத்தின் ஆட்சி வளைந்து கொடுக்காது என்பதை மீண்டும் ஒருமுறை வலியுறுத்துகிறோம்.

இந்தத் தருணத்தில், அனைத்து அரசியல் கட்சிகளும் மத அமைப்புகளும் ஒதுங்கி நின்று, எந்தவித அரசியல் அல்லது அமைப்பு சார்ந்த அடையாளங்களும் இன்றி முருக பக்தர்கள் தீபத்தூணில் தீபம் ஏற்ற வழிவிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். இது கூட்டத்தை அமைதியாகக் கையாளவும், பக்தர்கள் எவ்வித இடையூறுமின்றித் தங்கள் வழிபாட்டை மேற்கொள்ளவும் உதவும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.