காவிரி ஆணையத்தின் புதிய தலைவர் பியூஷ் சிங்: தமிழகத்திற்கு 2,000 கனஅடி நீர் திறக்க உத்தரவு!

காவிரி மேலாண்மை ஆணையத்தின் புதிய தலைவராக பியூஷ் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, இன்று (நவம்பர் 25) நடைபெற்ற ஆணையத்தின் 62-ஆவது கூட்டத்தில் தமிழ்நாட்டிற்கு அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 2,000 கனஅடி வீதம் காவிரி நீரைத் திறந்துவிட கர்நாடக அரசுக்கு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

யார் இந்த பியூஷ் சிங்?

பியூஷ் சிங் 2000-ஆம் ஆண்டு மகாராஷ்டிரா பிரிவைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி ஆவார். தற்போது மத்திய ஜல் சக்தி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய நீர் இயக்கத்தின் (National Water Mission) இயக்குநராகவும், கூடுதல் செயலாளராகவும் பணியாற்றி வருகிறார். தேசிய நீர் இயக்கத்தின் பணிகளைத் தொடர்ந்து கவனிப்பதுடன், காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் பொறுப்பையும் கூடுதலாக அவர் வகிப்பார்.

டெல்லி ஐஐடியில் சிவில் இன்ஜினியரிங் பிரிவில் பி.டெக் பட்டம் பெற்றுள்ள இவர், இதற்கு முன்பு மத்திய மின்சார அமைச்சகத்தில் கூடுதல் செயலாளராகவும், டெல்லி அரசின் எரிசக்தித் துறையில் இணைச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். மேலும், மகாராஷ்டிரா மாநிலத்தில் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பொறுப்புகளையும் வகித்துள்ளார்.

காவிரி மேலாண்மை ஆணையத்தின் பணிகள் என்ன?

தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு இடையிலான காவிரி நதிநீர் பங்கீட்டுப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில், 2018-ஆம் ஆண்டு காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது. காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு மற்றும் 2018-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் மாநிலங்களுக்கு இடையிலான நீர் பங்கீட்டை உறுதி செய்வது இதன் முக்கிய நோக்கமாகும்.

காவிரி ஆற்றின் நீர் இருப்பு, அணைகளின் நீர்மட்டம், நீர் திறப்பு ஆகியவற்றைக் கண்காணிப்பது, நீர் ஒழுங்காற்றுக் குழுவின் பரிந்துரைகளைப் பரிசீலித்து நீர் திறப்பு தொடர்பான உத்தரவுகளைப் பிறப்பிப்பது, மழைப்பொழிவு குறையும் காலங்களில் நீர் மேலாண்மையை ஒருங்கிணைப்பது உள்ளிட்ட பணிகளை இந்த ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

தமிழகத்திற்கு 2,000 கனஅடி நீர் திறக்க உத்தரவு!

இதற்கிடையே, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 62-ஆவது கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு அரசின் நீர்வளத்துறை செயலாளர் பிரசாந்த் வதனாரே உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். அப்போது, ஆணையத்தின் புதிய தலைவராகப் பொறுப்பேற்ற பியூஷ் சிங்கிற்கு தமிழ்நாடு அரசு சார்பில் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டன.

மேலும், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் பரிந்துரையை ஏற்று, அடுத்த 15 நாட்களுக்கு தமிழ்நாட்டிற்கு வினாடிக்கு 2,000 கனஅடி வீதம் காவிரி நீரைத் திறந்துவிட கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையே காவிரி நீர் பங்கீடு தொடர்பாகத் தொடர்ந்து கருத்து வேறுபாடுகளும் சட்டப் போராட்டங்களும் நீடித்து வரும் நிலையில், புதிய தலைவரின் நியமனமும், தமிழ்நாட்டிற்கான நீர் திறப்பு உத்தரவும் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.