டெல்லியில் இன்று (நவம்பர் 25) நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் 5 முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதுகுறித்து மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களிடம் அறிவித்தார்.
காமராஜர் துறைமுகத்தில் 2-வது சரக்கு முனையம்!
தமிழகத்தின் காமராஜர் துறைமுகத்தில் ரூ.4,288 கோடி மதிப்பீட்டில் 2-வது சரக்கு பெட்டக முனையம் அமைக்கப்பட உள்ளது. பொது மற்றும் தனியார் பங்களிப்பு (PPP) முறையில், வடிவமைத்தல், கட்டமைத்தல், நிதியளித்தல், இயக்குதல் மற்றும் ஒப்படைத்தல் (DBFOT) அடிப்படையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. 900 மீட்டர் நீளத்தில் அமையவுள்ள இந்த முனையம், ஆண்டுக்கு 20 அடி நீளமுள்ள 20 லட்சம் சரக்கு பெட்டகங்களைக் கையாளும் திறன் கொண்டதாக இருக்கும். இத்திட்டம் இரண்டு கட்டங்களாகச் செயல்படுத்தப்பட உள்ளது.
முதற்கட்டமாக 11 லட்சம் சரக்கு பெட்டகங்களைக் கையாளும் திறன் கொண்ட முனையம், ஒப்பந்தம் வழங்கப்பட்டதிலிருந்து 24 மாதங்களுக்குள் கட்டி முடிக்கப்படும். இரண்டாம் கட்டமாக கூடுதலாக 9 லட்சம் சரக்கு பெட்டகங்களைக் கையாளும் வசதி, 48 மாதங்களுக்குள் ஏற்படுத்தப்படும். இத்திட்டத்திற்கான ஒப்பந்த காலம், கட்டுமானப் பணிகளுக்கான 48 மாதங்கள் உட்பட மொத்தம் 40 ஆண்டுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், 24,346 சரக்கு பெட்டகங்கள் வரை ஏற்றிச் செல்லக்கூடிய, 400 மீட்டர் நீளமுள்ள பிரம்மாண்ட சரக்குக் கப்பல்களையும் கையாளும் வகையில் இந்த முனையம் வடிவமைக்கப்பட உள்ளது.
இதன் மூலம் சென்னை – எண்ணூர் தொழிற்பகுதி மற்றும் தென் மாநிலங்களின் உள்நாட்டுப் பகுதிகளில் இருந்து அதிகரித்து வரும் ஏற்றுமதி, இறக்குமதி சரக்குகளைக் கையாளும் திறன் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது காமராஜர் துறைமுகத்தில் உள்ள சரக்கு பெட்டக முனையம் ஆண்டுக்கு 8 லட்சம் பெட்டகங்களைக் கையாளும் திறன் கொண்டது. 2025-26 நிதியாண்டில் சுமார் 7 லட்சம் பெட்டகங்கள் கையாளப்பட்டுள்ளன. இதன் பயன்பாட்டுத் திறன் சுமார் 88 சதவீதமாக உள்ளது.
அசாமில் ரூ.2,014 கோடியில் புதிய விமான நிலையம்!
அசாம் மாநிலம் கச்சார் மாவட்டத்தில் உள்ள டூலூ பகுதியில் ரூ.2,014 கோடி செலவில் புதிய பசுமைவெளி விமான நிலையம் (Greenfield Airport) அமைக்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த விமான நிலையத்தில் 12,351 சதுர மீட்டர் பரப்பளவில் பயணிகள் முனையக் கட்டடம் அமைக்கப்பட உள்ளது. இதன் மூலம் உச்ச நேரங்களில் ஒரே நேரத்தில் 800 பயணிகளைக் கையாள முடியும்.
மேலும், ஏர்பஸ் ஏ-320 ரக விமானங்கள் தரையிறங்கும் வகையில் ஓடுபாதையும், இதே ரகத்தைச் சேர்ந்த 6 விமானங்களை நிறுத்தும் வசதியுடன் விமான நிறுத்துமிடமும் அமைக்கப்பட உள்ளன. இந்த விமான நிலையம் பயன்பாட்டுக்கு வருவதன் மூலம் தெற்கு அசாம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கான விமானப் போக்குவரத்து மேம்படுவதுடன், பிராந்திய வர்த்தகம் மற்றும் சுற்றுலாத்துறையும் வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தபால் நிலையங்களை நவீனமயமாக்க ரூ.1,141 கோடி!
நாடு முழுவதும் உள்ள தபால் சேவைகளை நவீனமயமாக்க அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.1,141 கோடி செலவிடவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் கீழ், கிராமப்புற தபால் நிலையங்கள் மேம்படுத்தப்படுவதுடன், கடிதங்கள் மற்றும் பார்சல்களைக் கொண்டு செல்லும் இடைநிலைப் போக்குவரத்து மற்றும் விநியோகக் கட்டமைப்புகள் வலுப்படுத்தப்பட உள்ளன. மேலும், மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் தபால் துறையின் திறனை மேம்படுத்தவும், நாடு முழுவதும் கடிதங்கள் மற்றும் பார்சல்களை விரைவாகவும் திறம்படவும் விநியோகிக்கும் வகையில் தபால் சேவைகளின் கட்டமைப்பை விரிவுபடுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.




