அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.2 கோடி மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அவரது உதவியாளர் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சண்முகநாதன் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், “ராஜேந்திர பாலாஜியின் உதவியாளர் சுதாகர் தெரிந்தவர்கள் யாருக்காவது அரசு வேலை வேண்டும் என்றால் தன்னை அணுகுமாறு கூறினார். அதன் அடிப்படையில் 2014ஆம் ஆண்டு முதல் பல்வேறு நபர்களை சுதாகரிடம் அறிமுகம் செய்து சுமார் 2 கோடி 5 லட்ச ரூபாய் அரசு வேலைக்காக வழங்கினேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.வேலை வாங்கித் தர தாமதமானதால் அதுகுறித்து பலமுறை அவரிடம் கேட்டபோது தலைமைச் செயலகத்திற்கு அழைத்துச் சென்று ராஜேந்திர பாலாஜி நேரில் சந்திக்க வைத்ததாக குறிப்பிட்ட சண்முகநாதன், “ராஜேந்திர பாலாஜியும் விரைவில் வேலை வாங்கித் தருவதாக உறுதி அளித்தார். ஆனால், என்னிடம் வேலைக்காக பணம் கொடுத்தவர்கள் தொந்தரவு செய்யத் தொடங்கியுள்ளனர்” என்றுள்ளார்.
மேலும், “தற்போது பணத்தைக் கேட்டால் தராமல் ராஜேந்திர பாலாஜியை சந்திக்க விடாமல் சுதாகர் மற்றும் அவரது மனைவி தாமதம் செய்கின்றனர். ஆகவே, ராஜேந்திர பாலாஜி சுதாகர் மற்றும் அவரது மனைவி தேவிஸ்ரீ ஆகியோரை கைது செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு பணத்தை திரும்பப் பெற்றுத் தர வேண்டும்” என புகார் மனுவில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Advertisement: