தமிழகத்தில் பெண் மாவட்ட ஆட்சியர் ஒருவருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், அவரது இல்லத்திற்குச் சென்று ரகளையில் ஈடுபட்டதாகவும் கள்ளக்குறிச்சி தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு இதற்குக் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
தவெக எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்!
கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீதான குற்றச்சாட்டுகளைக் கண்டித்துள்ள இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, அவர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசை வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
“கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதி தவெக உறுப்பினர் அருள் விக்னேஷ், கள்ளக்குறிச்சி மாவட்டபெண் ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதோடு, மதுபோதையில் அவரது இல்லத்திற்கு நேரில் சென்று ரகளையில் ஈடுபட்டதாகவும், அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியருக்கு தனி பாதுகாப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சி அளிக்கிறது.
தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷின் கண்ணியக் குறைவான, ஒழுக்கக்கேடான, பாலியல் வன்மச் செயலை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது கடுமையான சட்டப்பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.




