சசிகலாவுக்கு ஆதரவாக அதிமுக தலைமை அலுவலகத்திற்கு முன்பாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
அதிமுகவில் ஒற்றைத்தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. இந்நிலையில், எடப்பாடி பழனிச்சாமி பக்கம் அதிகப்படியான நிர்வாகிகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், தொண்டர்கள் தன்பக்கம் உள்ளதாக ஓ.பன்னீர் செல்வம் கூறிவருகிறார். இந்நிலையில், சசிகலாவுக்கு ஆதரவாக அதிமுகவைக் காத்திட, வழிநடத்திட, கட்சி அலுவலகத்திற்கு வாருங்கள் என ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சமீபகாலமாகத் தொடர் ஆன்மீக பயணம் மேற்கொண்டு வந்த சசிகலா, கடந்த சில நாட்களுக்கு முன்பாக அரசியல் பயணத்தை அறிவித்தார். அதனைத்தொடர்ந்து அவர், பல்வேறு முக்கிய நிர்வாகிகளை அழைத்துப் பேசி வருகிறார் இந்நிலையில், சசிகலாவுக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டப்பட்டுள்ள சம்பவம் அவரின் அரசியல் வருகையை உறுதிப்படுத்துவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்திற்கு அருகே சசிகலாவுக்கு ஆதரவாக போஸ்டர்களில், ’அதிமுகவைக் காத்திட, வழிநடத்திட, கட்சி அலுவலகத்திற்கு வாருங்கள்’ என எழுதப்பட்டுள்ளது. ஒற்றைத்தலைமை தான் வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி தரப்பும், இரட்டை தலைமைதான் வேண்டும் என ஓ.பன்னீர் செல்வம் தரப்பும் கூறிவரும் நிலையில், சசிகலாவுக்கு ஆதரவாக போஸ்டர் அரசியல் களத்தில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.








