கட்டணம் செலுத்த வற்புறுத்திய கல்லூரி – மாணவி உயிரிழப்பு

நாகப்பட்டினத்தில் மாணவி  உயிரை மாய்த்துக் கொண்டது தொடர்பாக கல்லூரி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரை அடுத்த அமிர்தநகர் வண்ணன்குளம்…

நாகப்பட்டினத்தில் மாணவி  உயிரை மாய்த்துக் கொண்டது தொடர்பாக கல்லூரி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரை அடுத்த அமிர்தநகர் வண்ணன்குளம் மேற்கரையில் வசிக்கும் கூலித்தொழிலாளி சுப்பிரமணி – சித்ரா தம்பதியின் மூன்றாவது மகள் சுபாஷினி நாகப்பட்டினத்தில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பிசியோதெரபிஸ்ட் படித்து வந்துள்ளார்.

இவரிடம் கல்லூரி நிர்வாகம் உடனடியாக கட்டணம் செலுத்த வேண்டுமென வற்புறுத்தியதோடு கல்லூரிக்கு வெளியே நிற்க வைத்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவி சுபாஷினி வீட்டில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், கல்லூரி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உறவினர்களும் பொதுமக்களும் நாகை – நாகூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை உயரதிகாரிகள் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதோடு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் மறியலைக் கைவிட்டுக் கலைந்து சென்றனர். இதனால் நாகை – நாகூர் சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.