கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட கடலோரப் பகுதிகளுக்கு கடல் சீற்ற எச்சரிக்கை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் வட மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. அதேபோல் கடலோர மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட கடலோரப் பகுதிகளுக்கு கடல் சீற்ற எச்சரிக்கையை பெருங்கடல் தகவல் சேவைகளுக்கான இந்திய தேசிய மையம் விடுத்துள்ளது.
இதையும் படியுங்கள் : T20W | முதல் அரையிறுதியில் ஆஸ்திரேலியா -தென் ஆப்ரிக்கா இன்று மோதல்!
கடலோர மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படியும், கடலில் இறங்க வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. கன்னியாகுமரியில் நீரோடி முதல் ஆரோக்கியபுரம் வரை, தூத்துக்குடியில் பெரியதாழை முதல் வேம்பார் வரை, திருநெல்வேலியில் கூட்டப்புளி முதல் கூடுதாழை வரையிலும் உள்ள கடலோரப் பகுதிகளில் இன்று (அக்.17ம் தேதி) மாலை 5.30 மணிவரை கடல் சீற்றம் 1.5 முதல் 2.0 மீட்டர் வரை காணப்படும் என அறிவித்துள்ளது.
சுற்றுலா பயணிகள் கடலில் இறங்குவதை தடுக்கும் வகையில் முக்கடல் சங்கமம் படித்துறை பகுதியில் காவல்துறையினர் தடுப்புகள் அமைத்துள்ளனர். சுற்றுலா பாதுகாவலர்கள் ஒலிபெருக்கி மூலம் சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும், அங்கு வரும் சுற்றுலா பயணிகளை கடலுக்கு செல்லவிடாமல் திருப்பி அனுப்புகின்றனர்.







