ரெம்டெசிவர் ஒதுக்கீட்டு அளவு உயர்வு: மத்திய அரசுக்கு முதல்வர் நன்றி!

ரெம்டிசிவர் மருந்து ஒதுக்கீட்டு அளவை, தமிழகத்திற்கு உயர்த்தி வழங்கியதற்காக மத்திய அரசுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர், ஒன்றிய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஸ்…

ரெம்டிசிவர் மருந்து ஒதுக்கீட்டு அளவை, தமிழகத்திற்கு உயர்த்தி வழங்கியதற்காக மத்திய அரசுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர், ஒன்றிய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஸ் கோயலுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டிற்கு வழங்கி வரும் ரெம்டிசிவர் மருந்து ஒதுக்கீட்டு அளவை உயர்த்தி வழங்குமாறு மத்திய அமைச்சரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதையடுத்து, நாளொன்றுக்கு 7000 என்ற அளவில் வழங்கி வந்த ரெம்டிசிவர் மருந்தை, நாளொன்றுக்கு 20,000 என்ற அளவில் உடனடியாக உயர்த்தி வழங்கியமைக்காக, தன் நன்றியை முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

கொடிய கொரோனா பெரும் தொற்றை எதிர்த்து போராடும் இத்தருணத்தில், குறித்த நேரத்தில் உயிர் காக்கும் மருந்து, ஆக்ஸிஜன் மற்றும் உபகரணங்கள் ஆகியவற்றின் தேவை இன்றியமையாதது எனவும் தனது கடிதத்தில் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இவ்வாறு அந்த செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.