திரையுலகப் பெருஞ்சுவர்…. முதலமைச்சரின் செல்ஃபி…கருணாநிதி நினைவலைகள்…

பொதுவாக வாழ்க்கையில் நமக்கு ஏணிப்படிகளாக அமைந்த பழைய விஷயங்களை எப்போதும் மறக்கக்கூடாது என்பார்கள். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தனக்கு ஏணிப்படிகளாக அமைந்த விஷயங்களை மட்டுமல்ல தன்னுடைய தந்தைக்கு ஏற்றமளித்த பழைய விஷயங்களைக்கூட மறக்காமல் இருக்கிறார்…

பொதுவாக வாழ்க்கையில் நமக்கு ஏணிப்படிகளாக அமைந்த பழைய விஷயங்களை எப்போதும் மறக்கக்கூடாது என்பார்கள். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தனக்கு ஏணிப்படிகளாக அமைந்த விஷயங்களை மட்டுமல்ல தன்னுடைய தந்தைக்கு ஏற்றமளித்த பழைய விஷயங்களைக்கூட மறக்காமல் இருக்கிறார் என்பதற்கு அந்த செல்ஃபி ஒரு உதாரணம். நிகழ்கால நினைவுகளைத்தான் பெரும்பாலும் செல்ஃபிக்களாக பதிவு செய்வார்கள். ஆனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பழங்கால நினைவுகளோடு செல்ஃபி எடுத்திருக்கிறார்.   எல்லோரும் முதலமைச்சரோடு செல்ஃபி எடுக்க ஆசைப்படுவார்கள் ஆனால் முதலமைச்சரே செல்ஃபி எடுக்க ஆசைப்பட்ட சேலம் மாடர்ன் தியேட்டர்சின் கடந்த கால நினைவுகளும் அவற்றில் பதிந்திருக்கும் கருணாநிதியின் நினைவலைகளும் வரலாற்று சுவடுகள்

திராவிட இயக்க கலைஞர்களின் தொட்டில், முத்தமிழ் அறிஞர் கலைஞரின் பேனா முனை தீட்டிய கூர்மிகு வசனங்களின் பிறப்பிடம், திரையுலகின் பல நினைவுகளை சுமந்து நிற்கும் பெருஞ்சுவர் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் புகழாரம் சூட்டபட்ட மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம் கடந்த 1935ம் ஆண்டு  சேலம் கோரிமேட்டில் டி.ஆர்.சுந்தரம் என்கிற திரையுலக ஜாம்பவானால் தொடங்கப்பட்டது.  அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜானகி எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என 5 முதலமைச்சர்களின் திரையுலக வாழ்க்கையில் மாடர்ன் தியேட்டர்ஸ்  முக்கிய அங்கம் வகித்துள்ளது. தமிழ் சினிமா என்றாலே சென்னை கோடம்பாக்கம்தான் என்கிற நிலை பிற்காலத்தில் உருவானாலும், ஆரம்ப காலகட்டத்தில் சென்னைக்கு வெளியேவும் சில ஸ்டூடியோக்கள் இருந்தன. அவற்றில் சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம் குறிப்பிடத்தக்கது.

1935ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனம்,  1982ம் ஆண்டுவரை 47 ஆண்டுகளாக படங்களை தயாரித்தது. ஒரே இடத்தில் படப்பிடிப்பு தளம், பாடல் பதிவு கூடம், லேப், என சினிமா தொடர்பான பல அம்சங்களை கொண்டுவந்து ஹாலிவுட் ரேஞ்சுக்கு பிரம்மாண்டம் காட்டிய மாடர்ன் தியேட்டர்ஸ் தமிழ் திரையுலகில் பல முதன்மைக்கு சொந்தமானது. தமிழில் முதல் படமான அலிபாபாவும் 40 திருடர்களும் சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்ததுதான். 1940ம் ஆண்டு வெளிவந்த தமிழின் முதல் இரட்டைவேட படமான பி.யூ.சின்னப்பா நடித்த உத்தமபுத்திரன் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்ததுதான். தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் ஆங்கில படமான தி ஜங்கிள் அந்த   நிறுவனத்தின் படைப்புதான். ஜவுளித் தொழில் தொடர்பாக லண்டனில் உயர்கல்வி பெற்றிருந்த டி.ஆர்.சுந்தரத்திற்கு சினிமாவின் மீது இயல்பாகவே ஒரு ஈர்ப்பு இருந்தது. லண்டனிலிருந்து சேலம் திரும்பியவுடன், அப்போது சேலத்தில் இருந்த படத்தயாரிப்பு நிறுவனமான ஏஞ்சல் ஃபிலிம்ஸுடன் இணைந்து படங்களை தயாரிக்கத் தொடங்கினார். பின்னர் தனியாக 1935ம் ஆண்டு சேலத்தில் மாடர்ன் தியேட்டர்ஸ்  நிறுவனத்தை தொடங்கிய டி.ஆர்.சுந்தரம் தனது முதல் தயாரிப்பான சதி அகல்யா திரைப்படத்தை 1937ம் ஆண்டு வெளியிட்டார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, சிங்களம், ஆங்கிலம் என 7 மொழிகளில் 150க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்தது மாடர்ன் தியேட்டர்ஸ்.

கருணாநிதி திரையுலகில் வளர்ந்து வந்த காலத்தில் அவரது திறமையை உணர்ந்து கொண்ட டி.ஆர்.சுந்தரம்,  அவரை மாடர்ன் தியேட்டர்ஸின் கதை வசன இலாகாவில் பணிபுரியுமாறு அழைப்புவிடுத்தார். கருணாநிதி, எம்.ஜி.ஆர் ஆகிய இரண்டு ஜாம்பவான்களின் திரையுலக வாழ்க்கையில் பெரும் திருப்புமுனையாக அமைந்த மந்திரிகுமாரியை தயாரித்தது மாடர்ன்  தியேட்டர்ஸ் நிறுவனம்தான். அந்த நிறுவனத்தில் பணியாற்றியபோதுதான் இருவருக்குமான நட்பு மிகவும் பலமானது, பல்வேறு சரித்திரப்படங்களை தயாரித்த மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம்தான் ஜெய் சங்கரை வைத்து ஜேம்ஸ் பாண்ட் பாணியில் பல படங்களையும் தயாரித்தது.

சேலத்தின் வரலாற்று அடையாளங்களில் ஒன்றாக விளங்கி வரும்  மாடர்ன் தியேட்டர்ஸ் இருந்த இடம் நாளடைவில் அதன் கம்பீரமான நுழைவு வாயில் மட்டுமே எஞ்சியிருக்கும் அளவிற்கு மாறியது. அந்த நுழைவு வாயிலுக்கும் ஆபத்து ஏற்பட்டுவிடுமோ என்கிற கலக்கம் பொதுமக்கள் மனதில் தோன்றின. அந்த நுழைவாயில் இடிக்கப்பட போவதாகவும் தகவல்கள் பரவி சேலம் மக்களை கவலையடைச் செய்தது. இந்நிலையில் அந்த கவலையை போக்கும் வகையில் அமைந்துள்ளது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், புதுப்பிக்கப்பட்டு வரும் அந்த திரையுலக பெருஞ்சுவருடன் எடுத்துக்கொண்ட செல்ஃபி. முதலமைச்சரையே செல்ஃபி எடுக்க வைத்த அந்த திரையுலக வரலாற்று சின்னம் இனி இடிக்கப்படாது என்கிற நம்பிக்கை சேலம் மக்களிடையே ஏற்பட்டுள்ளது.

 

-எஸ்.இலட்சுமணன்

 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.