சென்னையில் மழை, வெள்ளப் பாதிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பார்வையிட்டார்.
சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. கே.கே.நகர், கோடம்பாக்கம், ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, கோயம்பேடு, எழும்பூர், அண்ணாநகர், நுங்கம்பாக்கம், அம்பத்தூர், செங்குன்றம் உள்பட பெரும்பாலான பகுதிகளில் தொடர்ந்து மழை நீடிக்கிறது. இதனால் சாலைகளில் மழை நீர் தேங்கி இருக்கிறது. சென்னையின் புறநகர்ப் பகுதிகளிலும் மழை தொடர்கிறது. மேலும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தாம்பரம் பகுதிகளிலும் மழை பெய்துள்ளது. சில பகுதிகளில் வீடுகளுக்கு தண்ணீர் புகுந்துள்ளதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் நிலையில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, சென்னையில் கடந்த 2015 ஆம் ஆண்டிற்கு பிறகு ஒரே நாளில் 20.செ.மீ அதிகமாக மழை பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்றிரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருவதால் சென்னைக்கு ரெட் அலர்ட் விடுக்கப் பட்டுள்ளது.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மழை, வெள்ளப் பாதிப்புகளை இன்று பார்வையிட்டார். வழக்கமாக வரும் தனது காரில் செல்லாமல் மகேந்திரா ஜீப்பில் வந்த அவர், எழும்பூர் மற்றும் பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் மழை நீரில் இறங்கி ஆய்வு செய்தார். அவருடன் தலைமை செயலாளர் இறையன்பு, அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு, டிஜிபி சைலேந்திரபாபு, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி உட்பட பலரும் பார்வையிட்டனர்.








