நிவாரணப் பணிகளில் ஈடுபட திமுக-வினருக்கு முதலமைச்சர் வேண்டுகோள்

மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அரசு அதிகாரிகளுடன் இணைந்து திமுகவினர் நிவாரணப் பணிகளில் ஈடுபட வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் இடி, மின்னலுடன்…

மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அரசு அதிகாரிகளுடன் இணைந்து திமுகவினர் நிவாரணப் பணிகளில் ஈடுபட வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் நிலையில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மழை, வெள்ளப் பாதிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மழை நீரில் இறங்கி பார்வையிட்டார்.

இந்நிலையில், அரசு அதிகாரிகளுடன் இணைந்து திமுகவினர் நிவாரணப் பணிகளில் ஈடுபட வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

வடகிழக்குப் பருவ மழையையொட்டி முன்கூட்டியே ஆலோசனைக் கூட்டம் நடத்தி அரசு நிர்வாகம் முழு வீச்சில் முடுக்கி விடப்பட்டுள்ள நிலையில், நேற்றிரவு முதல் பெய்துவரும் கனமழை காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை இன்று நேரில் பார்வையிட்டு உரிய நிவாரண உதவிகள் வழங்கிடத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டிருக்கிறேன். அமைச்சர்களும் இதுபோன்ற நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் கழக நாடாளுமன்ற, சட்டமன்ற மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளும் அவரவர் பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு மற்றும் மருந்துகள் அளித்தல், பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்தல், தேங்கி நிற்கும் தண்ணீரை வெளியேற்றுதல் உள்ளிட்ட பல்வேறு நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள அரசு அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி – மக்களின் இன்னல்களைப் போக்கிட தீவிரமாகச் செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.