கொரோனா கட்டுப்பாடுகளை பொதுமக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

கொரோனா நோய்த் தொற்று பரவாமல் தடுப்பதற்கான கட்டுப்பாடுகளை பொதுமக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்தும் சூழலுக்கு அரசை நிர்ப்பந்திக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார்.…

கொரோனா நோய்த் தொற்று பரவாமல் தடுப்பதற்கான கட்டுப்பாடுகளை பொதுமக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்தும் சூழலுக்கு அரசை நிர்ப்பந்திக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வீடியோ ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாவது அலை கட்டுப்படுத்தப்பட்டுள்ள போதிலும், இன்னும் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார். அண்டை மாநிலங்களான கேரளாவிலும், கர்நாடகாவிலும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதையும், கொரோனா மூன்றாவது அலை வரக் கூடும் என மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார். இதை கருத்தில் கொண்டு, பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார். அவசியமின்றி வெளியே செல்ல வேண்டாம் என்றும், வெளியே செல்லும்போது முகக் கவசம் அணிந்து செல்ல வேண்டும் என்றும், சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார். மீண்டும் ஊரடங்கு சூழலுக்கு அரசை நிர்ப்பந்திக்காதீர்கள் என்றும் பொதுமக்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

மூன்றாவது அலை மட்டுமல்லாது எந்த அலை வந்தாலும் அதனை எதிர்கொள்வதற்கான வல்லமை தமிழ்நாடு அரசுக்கு உள்ளதாகத் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தேவையான உள்கட்டமைப்பு வசதிகளும் ஏராளமான அளவில் தயார் நிலையில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். அதற்காக யாரும் கொரோனாவை விலை கொடுத்து வாங்கக் கூடாது என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். கொரோனாவை எதிர்கொள்வதற்கு சிறந்த ஆயுதமாக தடுப்பூசி உள்ளதாக தெரிவித்துள்ள முதலமைச்சர், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தவறாமல் தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு கூறியுள்ளார். தடுப்பூசிகளை ஒன்றிய அரசு படிப்படியாக வழங்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், எனினும் இவை போதுமானதாக இல்லை என தெரிவித்துள்ளார்.

கொரோனா மூன்றாவது அலை மோசமானதாக இருக்கும் என மருத்துவ நிபுணர்கள் கூறுவதை பயமுறுத்தலாகக் கருதாமல், எச்சரிக்கையாகக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகளை பொதுமக்கள் தவறாமல் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.