விழுப்புரம் சமத்துவபுரத்தை பெண்களின் கைகளால் திறக்கவைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துகொள்கிறார். விழுப்புரம் மாவட்டம் வானூரை அடுத்த கொழுவாரி கிராமத்தில் பெரியார் நினைவு சமத்துவபுரத் திட்டத்தின் கீழ் 2 கோடியே 88 லட்சம் ரூபாய் மதிப்பில் வீடுகள் கட்டப்பட்டுள்ளன.
சமத்துவபுரத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. அதன்படி, இன்று காலை சமத்துவபுரத்தை திறந்துவைக்க அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான், பெரியகருப்பன் புடைசூழ முதலமைச்சர் வந்தார். சமத்துவபுரத்தை ரிப்பன் வெட்டி திறப்பதற்காக முதலமைச்சரிடம் கத்தரிக்கோலும் வழங்கப்பட்டது.
கடைசி நேரத்தில் தான் திறக்காமல் அருகே இருந்த பெண்மணியை அழைத்த முதலமைச்சர், அவரது கையால் ரிப்பன் வெட்டி திறக்கவைத்தார். அதனைத் தொடர்ந்து, சமத்துவபுரத்தில் இருந்த வீடு ஒன்றை திறந்துவைத்த முதலமைச்சர் அங்கும் அருகில் இருந்த பெண்மணியிடம் கத்தரிக்கோலை கொடுத்து திறக்க வைத்தார். வீட்டின் வசதிகள் குறித்து அவரிடம் கேட்டறிந்ததோடு, சமத்துவபுர குடியிருப்புகளையும் பார்வையிட்டார்.
பின்னர் அங்குள்ள விளையாட்டுத் திடலில் நடைபெற்ற கைப்பந்து போட்டிகளை தொடங்கிவைத்த முதலமைச்சர், அவர்களுடன் கைப்பந்து அடித்து விளையாடவும் செய்தார். முதலமைச்சரின் இந்த செயல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
Advertisement: