பெண் பயணிகளின் பாதுகாப்புக்காக மாநகர பேருந்துகளில் புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நகரப் பேருந்துகளில் பெண்கள், திருநங்கையர்களுக்கு கட்டணம் கிடையாது என்ற அறிவிப்பை வெளியிட்டது. இதன் காரணமாக லட்சக்கணக்கான பெண்கள் பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில் பேருந்துகளில் பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
சென்னையில் 500 மாநகரப் பேருந்துகளில் அபாய பொத்தான் வசதி செய்யப்பட்டுள்ளது. அதுபோலவே சிசிடிவி கேமரா வசதி, பாதுகாப்பு சாதனமும் பொருத்தப்பட்டுள்ளன. நிர்பயா திட்ட நிதியை பயன்படுத்தி செய்யப்பட்டுள்ள இந்த வசதிகள், மேலும் 2,800 மாநகரப் பேருந்துகளுக்கு விரிவுபடுத்தப்படவுள்ளன.
இதுதொடர்பாக போக்குவரத்துத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், அபாயப் பொத்தானை ஒருமுறை அழுத்தினால், அது எச்சரிக்கையை மாநகர போக்குவரத்து அலுவலகத்திலுள்ள கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்கும் என்று தெரிவித்தார். பேருந்துகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை 24 மணி நேரமும் ஒரு குழுவானது கண்காணிக்கும் எனவும், அபாய நேரத்தில் காவல்துறை உதவி எண்ணுக்கு (100) அந்த குழு எச்சரிக்கையை அனுப்புமெனவும், அவர்கள் அருகில் உள்ள ரோந்து வாகனத்தை எந்த நேரத்திலும் அந்த இடத்திற்கு அனுப்பிவைப்பார்கள் என்று தெரிவித்தார்.
பெண்களின் பாதுகாப்புக்காக பல்வேறு மொபைல் செயலிகள் உள்ளன. ஆனாலும், அது செயல்பாட்டுக்கு எடுத்துக்கொள்ளும் நேரம் மிக அதிகமாக இருக்கிறது. அத்துடன் இல்லாமல் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எச்சரிக்கை சென்றடைவதற்குள் குற்றவாளி அந்த இடத்திலிருந்து தப்பிச் செல்ல வாய்ப்பு உள்ளது. இந்த அபாய பொத்தான் மூலமாக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என நம்புகிறோம் என பயணி ஒருவர் தெரிவித்தார்.
ஆனால், ஆர்வத்தின் காரணமாக சிலர் அபாய பொத்தானை அழுத்த வாய்ப்புள்ளதாகவும், தவறான தகவல்கள் செல்ல வாய்ப்பிருப்பதாகவும் சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.
Advertisement: