முக்கியச் செய்திகள் தமிழகம்

‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ துறை எப்படி செயல்படுகிறது?

தமிழக அரசால் புதிதாக உருவாக்கப்பட்ட “உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” துறை மூலம் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட 549 மனுக்கள் மீது துரித நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த துறை எப்படி செயல்படுகிறது என்று தெரிய வேண்டுமா?…வாருங்கள் பார்க்கலாம்…

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலின்போது, “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற பொதுமக்கள் குறைகேட்கும் பரப்புரை யுத்தியை கையாண்டார் மு.க.ஸ்டாலின்.

திருவண்ணாமலையில் ஜனவரி 24ஆம் தேதி தொடங்கிய ”உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” பரப்புரை பயணம், பிப்ரவரி 28ஆம் தேதி சென்னையில் நிறைவடைந்தது. இந்த பரப்புரை பயணம் மூலம் தமிழகம் முழுவதும் 187 தொகுதிகளுக்கு சென்று மக்களின் கோரிக்கை மனுக்களை நேரில் பெற்ற மு.க.ஸ்டாலின், திமுக ஆட்சியில் அமைந்தவுடன் 100 நாட்களில் மனுக்களுக்கு தீர்வு காணப்படும் என்ற வாக்குறுதியையும் அளித்தார்.

இந்த பரப்புரை பயணம் மூலம் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் 72 மரப்பெட்டிகளிலும் மற்றும் 275 அட்டை பெட்டிகளிலும் சுமார் 4 லட்சம் மனுக்கள் பெறப்பட்டன.

தேர்தல் முடிவில் திமுக கூட்டனி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிப்பெற்று ஆட்சி அமைக்கப்பட்டு மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்றவுடன் முதல் உத்தரவாக, பொதுமக்களிடம் பெற்றப்பட்ட மனுக்களுக்கு தீர்வு காண்பதற்காக ”உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” என்ற தனித்துறையை உருவாக்கினார்.

துறையை உருவாக்கிய கையோடு அதற்கு சிறப்பு அதிகாரியாக ஷில்பா பிரபாகர் சதீஷ் ஐஏஎஸ் அதிகாரியை நியமித்த முதலமைச்சர் ஸ்டாலின், பொதுமக்களின் மனுக்கள் உள்ள பெட்டியின் சாவியை அவரிடம் ஒப்படைத்தார்.

பெறப்பட்ட அனைத்து மனுக்களும் மாவட்ட வாரியாக, வகை வாரியாக பிரிக்கப்பட்டு, தமிழ்நாடு மின் ஆளுமை மூலம் பராமரிக்கப்படும் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. அப்படி இதுவரை சுமார் 70 ஆயிரம் மனுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு மனுவும் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டவுடன், தனித்தன்மையுடன் கூடிய அடையாள எண் வழங்கப்பட்டு அடையாள எண்ணுடன் கூடிய குறுஞ்செய்தி மனுதாரருக்கு அனுப்பப்படுகிறது.

மனுக்களில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்கள் மற்றும் அதன் உண்மைத்தன்மைக்கு ஏற்றவாறு தகுதியான ஒவ்வொரு மனுவும் களஆய்வு மேற்கொள்ளப்பட்டு, உடனடி தீர்வு காண அனைத்து நடவடிக்கைகளும் மாவட்ட அலுவலர்கள் மேற்கொள்கின்றனர்.

அந்த வகையில் இதுவரை சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவாரூர், தேனி ஆகிய ஆறு மாவட்டங்களிலிருந்து பெறப்பட்ட 549 மனுக்களின் மீது முழுமையாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

“உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” துறை செயல்படத் தொடங்கி 10 நாட்கள் ஆனதை குறிக்கும் வகையில், பயனாளிகள் 10 பேரை சென்னை தலைமை செயலகத்திற்கு அழைத்து, அவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

அதுமட்டுமின்றி, இத்திட்டத்தின் கீழ் பெறப்பட்டுள்ள மனுக்கள் அனைத்தையும் முறையாக ஆய்வு செய்து, விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டுமென, துறை அலுவலர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

செய்திப்பிரிவு, நியூஸ் 7 தமிழ்…..

Advertisement:

Related posts

2 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு: ராதாகிருஷ்ணன்!

எல்.ரேணுகாதேவி

அதிநவீன CMS -01 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-50 ராக்கெட்.. சிறப்பம்சங்கள் என்ன?

Saravana

நாய்களின் மோப்ப சக்தி மூலம் கொரோனாவை கண்டறிய முடியுமா?

Gayathri Venkatesan