சந்திரபாபு நாயுடு பங்கேற்ற நிகழ்ச்சியில் மீண்டும் கூட்ட நெரிசல் – 3 பேர் உயிரிழப்பு

தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளனர். தெலுங்கு தேசம் கட்சி சார்பில் ஆங்கிலப் புத்தாண்டு, சங்கராந்தி ஆகியவற்றை முன்னிட்டு ஏழைப்…

தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளனர்.

தெலுங்கு தேசம் கட்சி சார்பில் ஆங்கிலப் புத்தாண்டு, சங்கராந்தி ஆகியவற்றை முன்னிட்டு ஏழைப் பெண்களுக்கு கைத்தறி புடவைகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று மாலை குண்டூரில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆந்திரா முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு, பெண்கள் சிலருக்கு புடவைகளை வழங்கி அங்கிருந்து புறப்பட்டு சென்றார். புடவைகளை வாங்குவதற்காக ஆயிரக்கணக்கான பெண்கள் அங்கு குவிந்தனர்.

இந்நிலையில் சந்திரபாபு நாயுடு சென்ற பின் அக்கட்சித் தலைவர்கள் பெண்களுக்கு புடவைகளை வழங்கினர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி மூன்று பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 29ஆம் தேதி ஆந்திராவின் நெல்லூர் மாவட்டத்தில் சந்திரபாபு நாயுடு தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 8 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் நடைபெற்று அதன் வடு மறைவதற்குள், மீண்டும் மூன்று
பெண்கள் உயிரிழந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.