ஞானேஷ்குமார் பதவி விலக கோரி சிஜேபி போராட்டம் – ஆதரவு தெரிவித்த முன்னாள் முதலமைச்சர்கள் கைது!

ஞானேஷ்குமார் பதிவி விலகக் கோஎஇ சிஜேபியின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கச் சென்ற பினராயி விஜயன், மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட முன்னாள் முதலமைச்சர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் விவகாரத்தில், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார், மற்ற இரண்டு தேர்தல் ஆணையர்களின் ஆலோசனையைக் கேட்காமல் தன்னிச்சையாகச் செயல்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த நிலையில், ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் என்று டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர் அமைப்பினர், ஆம் ஆத்மி கட்சியினர் உள்ளிட்டோர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல, கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினரும் மும்பையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், இந்தியா கூட்டணிக் கட்சியினர் நேற்று நாடாளுமன்றத்தில் இருந்து தேர்தல் ஆணையம் நோக்கிப் பேரணி சென்றனர். அப்போது, அவர்களைத் தடுத்து நிறுத்திய போலீசார், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோரைக் கைது செய்தனர்.

இதனிடையே, கரப்பான் பூச்சி கட்சியின் சார்பில், ஞானேஷ்குமார் பதவி விலகக் கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் இன்று போராட்டம் நடத்தப்படும் என்று சிஜேபி நிறுவனர் அபிஜித் தீப்கே அறிவித்தார். இந்தப் போராட்டத்திற்கு அனுமதி மறுத்த டெல்லி காவல்துறையினர், நகர் முழுவதும் தடுப்புகளை அமைத்துப் பாதுகாப்பைப் பலப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில், ஜந்தர் மந்தர் பகுதிக்கு வர முயன்ற காக்ரோச் ஜனதா கட்சியைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் டெல்லி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். டெல்லியைப் பொறுத்தவரை, 20 பாதுகாப்பு மண்டலங்களாகப் பிரித்துக் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஜந்தர் மந்தர் பகுதியில் யாரும் ஒன்றுகூட முடியாதபடி, காவல்துறையினர் பல்வேறு பகுதிகளில் தடுப்புகளை அமைத்து, வாகனத் தணிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக மும்பையில் இருந்து டெல்லி விமான நிலையத்திற்கு வந்த அபிஜித் தீப்கேவை டெல்லி போலீசார் கைது செய்தனர். மேலும், டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் அமைப்பின் தலைவர் நேஹா போராவையும் போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில், சிஜேபியின் போராட்டத்தை ஆதரிப்பதற்காக டெல்லி வந்த முன்னாள் முதலமைச்சர்கள் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டுத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சிஜேபியின் போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஜந்தர் மந்தர் நோக்கிச் சென்றுகொண்டிருந்த முன்னாள் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், சிபிஐ(எம்) அகில இந்தியச் செயலாளர் எம்.ஏ.பேபி, தமிழ்நாடு மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் உள்ளிட்டோரை சத்ராசல் ஸ்டேடியம் அருகே தடுத்து நிறுத்திய டெல்லி போலீசார், அவர்களைக் கைது செய்தனர்.

அதேபோல், மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சர் மம்தா பானர்ஜி, முன்னாள் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோரையும் டெல்லி போலீசார் கைது செய்து தடுப்புக் காவலில் வைத்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.