காஸா பகுதிக்குள் தரைவழித் தாக்குதல் நடத்துவதற்கான ஆயத்த அறிகுறியாக, அந்தப் பகுதி மற்றும் லெபனான் எல்லைப் பகுதிகளில் இருந்து பாதுகாப்பான வேறு இடங்களுக்கு தங்களது குடிமக்களை இஸ்ரேல் வெளியேற்றியது.
இது குறித்து அந்த நாட்டு பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் கூறியதாவது:
“காஸா மற்றும் லெபனான் எல்லையையொட்டி அமைந்துள்ள பகுதிகளிலிருந்து இஸ்ரேலியர்களை பாதுகாப்பாக வேறு பகுதிகளுக்கு வெளியேற்றியுள்ளோம். லெபனான் எல்லையில் 20 ஆயிரத்துக்கும் மேலானோர் வசிக்கும் கிர்யாத் நகரிலிருந்து அனைவரையும் வேறு இடங்களுக்கு வெளியேற்ற திட்டமிட்டுள்ளோம். எல்லைக்கு அப்பாலிருந்து வீசப்பட்ட ஏவுகணைத் தாக்குதல் காரணமாக அந்த நகரில் 5 வயது சிறுமி உள்பட 3 இஸ்ரேலியர்கள் காயமடைந்தனர்” என்று பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் கூறினர்.
முன்னதாக, ‘காஸாவை இதுவரை வெளியிலிருந்து பாா்த்துக் கொண்டிருக்கும் இஸ்ரேல் வீரா்கள், அந்தப் பகுதியின் உள்ளிருந்து பாா்ப்பதற்கு தங்களைத் தயாா்ப்படுத்திக்கொள்ள வேண்டும்’ என்று இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சா் யோவாவ் காலன்ட் வியாழக்கிழமை உத்தரவிட்டார். இதன் மூலம், காஸாவுக்குள் இஸ்ரேல் ராணுவம் விரைவில் தரைவழித் தாக்குதல் நடத்தவிருப்பதை அவா் மறைமுகமாக அறிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், காஸா மற்றும் லெபனான் எல்லைப் பகுதிகளில் வசிக்கும் தங்களது குடிமக்களை பாதுகாப்பான வேறு பகுதிகளுக்கு இஸ்ரேல் வெளியேற்றியுள்ளது. தரைவழித் தாக்குதல் நடைபெறுவதற்கான நேரம் நெருங்கி வருவதை உணர்த்துவதாகக் கருதப்படுகிறது. இஸ்ரேலின் வடக்கு எல்லையில் அமைந்துள்ள லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பு, நீண்ட தொலைவு ஏவுகணைகள் உள்ளிட்ட ஆயுத பலம் வாய்ந்த படையைக் கொண்டுள்ளது. ஹமாஸை ஒழிக்க இஸ்ரேல் முயன்றால், அந்த நாட்டை எதிர்த்துப் போரிடப்போவதாக ஹிஸ்புல்லா அமைப்பு சூளுரைத்துள்ளது.
குறிப்பிடத்தக்க ராணுவ பலத்தைக் கொண்டிருக்கும், இஸ்ரேலின் தீவிர எதிரி நாடான ஈரான் இந்த இரு அமைப்புகளுக்குமே ஆதரவு அளித்து வருகிறது. எனவே, காஸாவுக்குள் நுழைந்து இஸ்ரேல் படையினர் தாக்குதல் நடத்தினால், வடக்கு எல்லை வழியாக லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பினரையும், ஈரான் ராணுவத்தையும் இஸ்ரேல் எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என்று கருதப்படுகிறது. இந்தச் சூழலில், காஸாவுக்குள் தரைவழித் தாக்குல் நடத்தப்போவதை உறுதிப்படுத்தும் விதமாக, எல்லைப் பகுதிகளில் இருந்து தங்களது குடிமக்களை இஸ்ரேல் வெளியேற்றியுள்ளது.
காஸா விவகாரத்தில் மேற்காசியா முழுவதும் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், அந்தப் பிராந்திய வான் எல்லையில் பாய்ந்து சென்ற ஏவுகணைகளை அமெரிக்கா இடைமறித்து அழித்துள்ளது. அந்த ஏவுகணை இஸ்ரேலை நோக்கி வீசப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. அந்த வகையில், சுமாா் 2 வாரங்களாக நடைபெற்று வரும் காஸா போரில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா மேற்கொண்டுள்ள முதல் ராணுவ நடவடிக்கை இதுவாகத்தான் இருக்கும் என்று கூறப்படுகிறது.







