“சியான் விக்ரம்” என்று கூறினாலே நம் நினைவிற்கு முதலில் வருவது, அவரின் கடின உழைப்புதான். தான் நடிக்கும் கதாபாத்திரத்திக்கு ஏற்றவாறு உடல் அமைப்பை மாற்றிக்கொள்வதில் வல்லவர் அவர். விக்ரம் நடிப்பில் வெளியாக உள்ள ‘கோப்ரா’வுக்கு முன், நடிகர் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் இணைந்து நடிக்கும் “சீயான் 60” திரைப்படம் வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
அஜய் ஞானமுத்து இயக்கும் விக்ரமின் ஆக்ஷன் த்ரில்லர் படம் ‘கோப்ரா’. கொரோனா இரண்டாம் அலையின் தொற்று நோய் காரணமாக இப்படம் ஒரு வருடத்திற்கும் மேலாக திரையிடுவதில் தாமதமாகி வருகிறது. மேலும், இப்படத்தில் விக்ரம் பல தோற்றங்களில் காணப்படுவார் என்று கூறப்படுகிறது. இப்படத்தில் அதிகளவில் கிராபிக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. ‘கோப்ரா’வின் படப்பிடிப்பு முடிந்தாலும், தயாரிப்புக்குப் பிந்தைய பணிகள் முடிய அதிகநாட்களாகும் என கூறப்படுகிறது.
இந்நிலையில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் இணைந்து நடிக்கும் திரைப்படம் ‘சீயான் 60’ ,சமீபத்தில் இந்த படத்தை பற்றி இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் கூறுகையில், “இப்படத்தின் 50% படப்பிடிப்பு முடிந்துவிட்டது, மேலும் கொரோனா ஊரடங்கு முடிந்தபிறகு படப்பிடிப்பு ஜூலை மாதத்தில் தொடங்கப்படும் என்று கூறியிருந்தார்.
மேலும் “சீயான் 60” படப்பிடிப்பிற்கு பிறகு, நடிகர் விக்ரம் மணிரத்தினம் இயக்கவிருக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க உள்ளார். இந்த அடுத்தடுத்து விக்ரம் படங்கள் ரசிகர்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.







