வன்னியர்களுக்கு 10.50% இட ஒதுக்கீடு வழங்குவது குறித்த சட்டத்தை செயல்படுத்துவது குறித்து ஆளுனர் உரையில் எதுவும் அறிவிக்கப்படாதது அரசின் நோக்கங்கள் குறித்த ஐயங்களை ஏற்படுத்துவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
“வேளாண் வளர்ச்சிக்காக தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும் என 13 ஆண்டுகளாக பா.ம.க வலியுறுத்துகிறது. வேளாண் துறைக்காக தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று ஆளுனர் உரையில் அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத் தக்கது. பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த ஆலோசனைக்குழு அமைக்கப்படும் என்பதும் வரவேற்க தக்கது.
கடந்த ஆட்சியில் நீட் தேர்வுக்கு விலக்குக் கோரி அனுப்பப்பட்ட சட்டங்களை மத்திய அரசு திருப்பி அனுப்பி விட்டது. இத்தகைய சூழலில் புதிதாக நிறைவேற்றப்படும் சட்டங்களுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைப்பதை உறுதி செய்ய எத்தகைய அணுகுமுறையை தமிழக அரசு கடைபிடிக்கப் போகிறது என்பது குறித்த செயல்திட்டம் ஆளுநர் உரையில் இல்லாதது ஏமாற்றமளிக்கிறது. தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது.
வன்னியர்களுக்கு 10.50% இட ஒதுக்கீடு வழங்குவது குறித்த சட்டத்தை செயல்படுத்துவது குறித்து ஆளுனர் உரையில் எதுவும் அறிவிக்கப்படாதது அரசின் நோக்கங்கள் குறித்த ஐயங்களை ஏற்படுத்துகிறது. இந்த ஐயங்களை போக்கவும், தமிழ்நாட்டில் முழுமையான சமூகநீதியை உறுதி செய்வதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திமுக ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று ஐந்தாண்டுகளுக்கு முன் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார். ஆனால், ஆளுனர் உரையில் அது குறித்து எந்த வாக்குறுதியும் அளிக்கப்படாதது ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆளுனர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போதாவது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இவற்றையெல்லாம் கவனத்தில் கொள்வார் என நம்புவோம்.”
இவ்வாறு பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.