மதுரை வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வுக்காக, அழகர்கோயிலில் இருந்து கள்ளழகர் தங்கப்பல்லக்கில் புறப்பட்டார்.
சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நேற்று காலை பல்லாயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் வெகு விமர்சையாக நடத்தப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் மணக்கோலத்தில் இருந்த மீனாட்சி-சுந்தரேஸ்வரை தரிசித்தனர்.
இந்த நிலையில் மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வுக்காக, அழகர்கோயிலிலிருந்து தங்கப்பல்லக்கில் கள்ளழகர் நேற்று மாலை புறப்பட்டார்.
காவல் தெய்வமாக பதினெட்டாம் படி கருப்பசாமியிடம் தீபாராதனை பெற்று புறப்பாடு நடைபெற்றது. அழகர்கோயில், பொய்கைக்கரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன் திருப்பதி, காதக்கிணறு கடச்சனேந்தல் உள்ளிட்ட ஊர்களில் அமைக்கப்பட்ட திருக்கண் மண்டப படிகளில் எழுந்தருளிய கள்ளழகர் மூன்று மாவடி வந்தடைந்தார்.
கள்ளழகர் திருக்கோலத்தில் தங்கப்பல்லக்கில் புறப்பட்ட அழகர், நாளை அதிகாலை 5.50 மணி முதல் 6.20 மணிக்குள் வைகையாற்றில் தங்ககுதிரை வாகனத்தில் கள்ளழகர் எழுந்தருளவுள்ளார். * சித்திரை திருவிழா பாதுகாப்பு பணியில் 5000 காவல்துறையினர் ஈடுபட்டு உள்ளனர்.







