முதலமைச்சர் விஜய் கர்நாடகா வர வேண்டாம் – டி.கே.சிவக்குமார்

தற்போது பதற்றமான சூழல் நிலவுவதால் முதலமைச்சர் விஜய் கர்நாடகா வரவேண்டாம் என்று கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கர்நாடக முதலமைச்சராக டி.கே.சிவக்குமார் பொறுப்பேற்ற பிறகு, மேகதாதுவில் காவிரி ஆற்றின் குறுக்கே அணைக்கட்ட தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதற்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கர்நாடக அரசு மேகதாது விவகாரத்தில் பிரதமர் தலையிட்டு தீர்வுகாண வேண்டும் என்ரு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இதனிடையே முதலமைச்சர் விஜய் ஆகஸ்ட் 3-ஆம் தேதி மேகதாது அணை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த செல்ல உள்ளதாக தகவல் வெளியானது. கர்நாடக வரும் முதல்வர் விஜய்க்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படும் என்றும், அவரது பயணத்திற்கு ஹெலிகாப்டர் ஏற்பாடு செய்யப்படும் என்றும் கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்திருந்தார். இதனிடையெ காவிரி மேலாணமை ஆணையம் கூறி தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று உத்தரவிட்டது. இதனால் கர்நாடகத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று டி.கே.சிவக்குமார் காவிரி விவகாரம் குறித்து நீர்வளத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “”தமிழக முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து, இரு மாநில நலன் சார்ந்த பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதிக்க தமிழ்நாடு முதல்வர் கர்நாடகாவிற்கு வர விரும்புவதாக எங்களது தலைமைச் செயலாளருக்கு கோரிக்கை வந்தது. நாங்களும் அதை ஏற்றுக்கொண்டு வரும் 3-ஆம் தேதி சந்திப்பிற்கான தேதியை உறுதி செய்திருந்தோம்.
​ஆனால், காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA) மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு (CWRC) ஆகியவற்றின் சமீபத்திய உத்தரவுகளுக்குப் பிறகு, தற்போது இரு மாநிலங்களுக்கும் இடையே ஒரு சுமூகமான சூழ்நிலை நிலவவில்லை. எனவே, இரு மாநிலங்களுக்கும் இடையேயான அமைதியான மற்றும் நல்லிணக்கமான சூழலை பேண வேண்டும் என்பதற்காக, தமிழக முதலமைச்சரின் இந்த வருகையை சில நாட்களுக்கு ஒத்திவைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

​மேகதாது அணைத் திட்டம் தமிழகத்திற்கு மிகவும் நன்மை பயக்கக்கூடிய ஒன்றாகும். மின் உற்பத்தித் திட்டத்தைத் தவிர, அந்த நீர்த்தேக்கத்தின் மூலம் தண்ணீரைச் சமன்படுத்தும் வசதி மட்டுமே கிடைக்கும். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளையும் சட்டத்தின் விதிகளையும் பின்பற்றுவது எங்களது கடமை.
​அதே நேரத்தில், கர்நாடகாவில் எதிர்க்கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளைக் கலந்தாலோசித்து முடிவெடுக்க வேண்டியுள்ளது. இதற்காக வரும் நாட்களில் அனைத்துக் கட்சி மற்றும் அமைப்புகளின் கூட்டத்தைக் கூட்டவுள்ளோம். அதன் பிறகு, ஒரு அமைதியான, சுமூகமான சூழலில் தமிழக முதலமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம்.

​அதேபோல், கர்நாடகாவில் சிலர் அறிவித்துள்ள பந்த் போராட்டங்களால் எந்தப் பிரச்சனையும் தீரப்போவதில்லை. மக்களின் உணர்வுகளுக்கு நாங்கள் மதிப்பளிக்கிறோம், பொதுமக்களின் நலனைப் பாதுகாக்க அரசு முன்னுரிமை அளிக்கும். பந்த் போராட்டங்கள் மூலம் சாமானிய மக்கள் பாதிக்கப்படக்கூடாது என அமைப்புகளுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்” என்று டி.கே. சிவகுமார் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.