‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்!

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை முதலமைச்சர் விஜய் தொடங்கிவைத்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் வாக்குறுதியின்படி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு, ஜூன் 22-க்குப் பிறகு அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை முதலமைச்சர் விஜய் அறிவித்தார். இதற்காக ஆண்டுக்கு ரூ. 755.83 கோடி நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டது.

இந்த நிலையில், இன்று காலை ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தைத் தொடங்கி வைக்க முதலமைச்சர் விஜய் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை சென்றடைந்தார். மதுரை விமான நிலையத்தில் முதலமைச்சர் விஜய்க்கு அமைச்சர்கள், தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பூங்கொத்து கொடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து, விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்குச் சென்றடைந்த முதலமைச்சர் விஜய்க்கு வழியெங்கும் பொதுமக்கள் மற்றும் தவெக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும், மருத்துவமனை வளாகத்தில் அமைச்சர்கள் ஆனந்த், நிர்மல்குமார், அருண்ராஜ், அரசு அதிகாரிகள், தவெக தொண்டர்கள் எனப் பலரும் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

இதனையடுத்து, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை கூட்டரங்கில் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தின் தொடக்க விழா தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. இதில் முதலமைச்சர் விஜய், ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தின் கீழ் பச்சிளம் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரங்களை வழங்கி, திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.