பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்தில் கடந்த சில மாதங்களாக இந்திய வணிகக் கப்பல் மாலுமி ஒருவர் உட்பட 6 பேர் சிக்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்களைப் பாதுகாப்பாகத் தாயகம் அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாலுமியின் குடும்பத்தினர் கடந்த சில மாதங்களாக அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், இந்திய மாலுமி உள்ளிட்ட கப்பல் பணியாளர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
பாகிஸ்தானிடம் தூதரக கோரிக்கை!
இதுகுறித்து அவர் கூறுகையில், “கராச்சி துறைமுகத்தில் உள்ள கப்பலில் பணியாற்றும் மாலுமிகள் தொடர்பாக, அங்குள்ளவர்களுடனும், அவர்களது வேலைவாய்ப்பு நிறுவனமான கப்பல் நிறுவனத்துடனும், அதன் முகவருடனும் நாங்கள் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம். இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண முயற்சி செய்து வருகிறோம். மேலும், இதுதொடர்பாக பாகிஸ்தான் தரப்பிடம் தூதரக ரீதியிலான கோரிக்கையையும் முன்வைத்துள்ளோம்” என்றார்.
கப்பலை விட்டு வெளியேற முடியாத நிலை!
தொடர்ந்து பேசிய அவர், “கராச்சியில் உள்ள கப்பலில் பணியாற்றும் மாலுமிகள் தொடர்பான விவகாரம், அடிப்படையில் கப்பலின் உரிமையாளருக்கும் அதில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் இடையிலான பிரச்சினையாகும். கப்பலில் பணியாற்றும் ஊழியர்கள் திடீரென கப்பலை விட்டு வெளியேற முடியாது. அவர்கள் வெளியேறுவதற்கு முன்பாக மாற்றுப் பணியாளர்கள் வந்து பொறுப்பேற்க வேண்டும். எனவே, இது கப்பல் நிறுவனத்துக்கும் அதன் ஊழியர்களுக்கும் இடையிலான வணிக ரீதியிலான பிரச்சினையாகும்” என்று தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட கப்பல் நிறுவனம் மற்றும் அதன் முகவருடன் இந்தியா தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், சிக்கித் தவிக்கும் இந்திய மாலுமி உள்ளிட்ட பணியாளர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.




