மதுராந்தகம் தொகுதியில் திமுக வேட்பாளர் பரந்தாமனை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “மதுராந்தகத்தில் சூட்டிங் எடுக்க வந்த முதலமைச்சர், ஒரு சீனில் டீ குடிக்கிறார். டீ குடித்துவிட்டு ரூ.500 கொடுத்து பந்தா பண்ணுகிறார். அவர் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ரூ.10-க்கு விற்ற டீ, இன்று ரூ.15. இது அவருக்குத் தெரியுமா? மளிகைக் கடையில் விலைவாசி பற்றி கேளுங்க விஜய் ப்ரோ. விலைவாசியைச் சரிசெய்யாமல், ரீல்ஸ் எடுத்துக்கொண்டு அமைச்சர்கள் சுற்றுகிறார்கள். முதலமைச்சர் தொகுதியான பெரம்பூருக்குக்கூட ஒருமுறைதான் விஜய் சென்றிருக்கிறார். ஆனால், தோல்வி பயத்தில் தெருத்தெருவாக சுற்றுகிறார். பொதுவாக, இடைத்தேர்தல் என்றால் முதலமைச்சராக இருப்பவர்கள் பெரிதாக அலட்டிக்கொள்ள மாட்டார்கள். ஆனால் தனது ஆட்சி மீது நம்பிக்கை இல்லாமல்தான் விஜய் இடைத்தேர்தலில் அலைந்து வருகிறார்.
சட்டமன்றத் தேர்தலில் முழுமையாக 10 இடங்களில் கூட பிரச்சாரம் செய்யாதவர், வண்டியைவிட்டுக்கூட இறங்காதவருக்கு இன்று இருக்கும் நிலைமையைப் பார்த்தீர்களா? மனித நடமாட்டம் இல்லாத சந்துக்குள்கூட ரோடு ரோடாகச் சுற்றுகிறார். இப்போதுதான் அவர் கால்தரையில் படுகிறது. உங்கள் பயம் எனக்குப் பிடித்திருக்கிறது சி.எம். சார். மதுராந்தகத்தில் பேசிய விஜய், ‘ஏன் நாங்க முதலமைச்சராக ஆகக்கூடாதா?’ எனக் கேட்டிருக்கிறார். அவர் முதலமைச்சராகிவிட்டார் என்பதை அவரே நம்பவில்லை போல. நீங்க முதலமைச்சர் மட்டுமல்ல; ஜோசியர் சொல்வது போல் பிரதமராகவும், ஏன் அமெரிக்க ஜனாதிபதியாகவும் ஆகுங்கள். உலகப் பிரச்சனைகளைக்கூடத் தீர்த்து வையுங்கள். அதற்கு முன்னாடி, உள்ளூர் கரண்ட் கட் பிரச்சனையைத் தீர்த்து வைங்க.
திமுக திட்டங்களைப் பட்டியலிட்டால், ‘சொந்தக் காசில் செய்தீர்களா? மக்கள் பணம் தானே?’ எனக் கேட்கிறார்கள். நான் கேட்பது, கரிகாலன் கல்லணை கட்டினார் என்றால், அவரே கல்லை எடுத்து கட்டினாரா? ராஜராஜ சோழன் தஞ்சைப் பெரிய கோவில் கட்டினார் எனப் படிக்கிறோம். பெருந்தலைவர் காமராஜர் அணைகளையும், பள்ளிக்கூடங்களையும் கட்டினார் எனப் படிக்கிறோம். இவர்கள் எல்லாம் சொந்தப் பணத்திலா செய்தார்கள்? இவர்களையும் இதே கேள்வி கேட்பீர்களா? ஏன், இப்போது தங்க மோதிரம் போட்டீர்களே… இது என்ன உங்கள் அப்பா வீட்டு காசா? இதற்குப் பதில் சொல்லுங்க!” இவ்வாறு அவர் பேசினார்.




