சமூக நீதி விடுதியில் முதலமைச்சர் விஜய் திடீர் ஆய்வு!

சென்னை, சைதாப்பேட்டையில் உள்ள எம்.சி.ராஜா சமூக நீதி விடுதியில் முதலமைச்சர் விஜய் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

கடந்த ஒரு மாத காலமாக முதலமைச்சர் விஜய் பல்வேறு துறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டங்கள் நடத்தி வருகிறார். இதில் துறை மேம்பாடு குறித்தம் செயலப்படுகள் குறித்தும் ஆய்வு செய்து வருகிறார். அதேபோல பல்வேறு அரசுக்கு சொந்தமான இடங்களிலும் திடீர் ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறார்.

முன்னதாக செங்கல்பட்டு மாவட்டம், நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டப்பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார். இதனைத்தொடர்ந்து, எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அங்கு அவர் கர்ப்பிணி பெண்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் முறையாக உள்ளதா…? என்பது குறித்தும் ஆய்வு செய்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு பெரம்பூர் தொகுட்திக்கு சென்ற முதலமைச்சர் விஜய் வியாசர்பாடி மின்சாரப் பேருந்து பணிமனையை ஆய்வு செய்தார்.

இந்த நிலையில் இன்று சென்னை, சைதாப்பேட்டையிலுள்ள எம்.சி. இராஜா சமூக நீதி விடுதியில் முதலமைச்சர் விஜய் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அவ்விடுதியிலுள்ள சமையலறை மற்றும் உணவுக்கூடத்தைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, சமூக நீதித் துறை அமைச்சர் வன்னி அரசு, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.