கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆலோசனை

திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். 2023ம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு ஆளுநர் உரையுடன் தொடங்கியது. ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழில் ஒளவையாரின் பாடலோடு…

திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

2023ம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு ஆளுநர் உரையுடன் தொடங்கியது. ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழில் ஒளவையாரின் பாடலோடு தனது உரையை தொடர்ந்தார்.

அப்போது, தமிழ்நாடு அரசு தயாரித்த உரையை ஆளுநர் முறையாக படிக்கவில்லை எனவும், உரையில் ஆளுநர் சொந்தமாக சேர்த்துப் படித்த எதுவும் அவைக்குறிப்பில் இடம்பெறாது எனவும், சட்டப்பேரவையில் ஆளுநர் முன்பே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார். மேலும் ஆளுநர் ஆர்.என்.ரவி, தேசிய கீதம் இசைக்கும் முன்பே வெளியேறினார். ஆளுநரின் இந்த செயல், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி உறுப்பினர்கள் இடையே அதிருப்தியை உண்டாக்கியது.

இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன், முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, ஆ.ராசா எம்.பி. உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில், ஆளுநரின் செயல்பாடுகளை சட்ட ரீதியாக எதிர்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.