புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அடுத்தாண்டு ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர் மாநாட்டை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். சென்னை விமான நிலையம் வந்த அவருக்கு அமைச்சர்கள், எம்பிக்கள், எல்எல்ஏக்கள் உள்ளிட்டோர் பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு 9 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்வதாக தெரிவித்தார். தன்னுடன் அரசு அதிகாரிகளும் பயணிப்பதாக கூறிய அவர், கடந்த ஆண்டு ஐக்கிய அரபு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டபோது புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானதாக கூறினார். துபாய் பயணத்தின்போது 6 ஆயிரத்து100 கோடி ரூபாய் முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானதாக தெரிவித்த அவர், அடுத்தாண்டு நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர் மாநாட்டுக்கு முதலீட்டாளர்களை நேரில் சந்தித்து அழைப்பு விடுக்கவுள்ளதாக குறிப்பிட்டார்.
இதனை தொடர்ந்து, சென்னை விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புறப்பட்டு சென்றார். அங்கு 2 நாள்கள் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். தொடர்ந்து, 26ஆம் தேதி ஜப்பான் செல்லும் அவர், 31ம் தேதி வரை அதாவது 7 நாட்கள் தங்கி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். அங்கு முன்னணி தொழில்துறை தலைவர்கள், அரசு அதிகாரிகளை சந்தித்து, உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்று, தமிழகத்தில் முதலீடு செய்ய வருமாறு அழைப்பு விடுக்க உள்ளார். ஜப்பானில் நடைபெறும் முதலீட்டு ஊக்குவிப்பு மாநாட்டில் பல்வேறு நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன. பின்னர் வரும் மே 31ஆம் தேதி அன்று பிற்பகல் சென்னை திரும்புகிறார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுடன் தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உடன் செல்கிறார்.
இன்று மாலை நடக்கும் முதலீட்டாளர் மாநாட்டில், கலந்துகொள்ளும் முதலமைச்சர், அங்கு தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனம், தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் போன்ற பல்வேறு தமிழ் கூட்டமைப்புகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட உள்ளார். இதனை தொடர்ந்து சிங்கப்பூர் வாழ் தமிழர்கள் ஏற்பாடு செய்துள்ள கலை நிகழ்ச்சியிலும் முதலமைச்சர் பங்கேற்கிறார்.
முன்னதாக, வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை மெரினாவில் உள்ள அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
- பி.ஜேம்ஸ் லிசா









