தமிழ்நாடு அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், “தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்கள் கரூர் 10.07.2026 அன்று (வெள்ளிக்கிழமை) வருகை புரிந்து கரூர், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் புதிய தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டி, பணி நியமன ஆணைகளை வழங்க உள்ளார்கள்.
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியம், மனவாசி ஊராட்சியில் ரூ.1700 கோடி மதிப்பீட்டில் தோல் அல்லாத (Non-Leather) காலணிகளை உற்பத்தி செய்யும் Evervan Kothari Footwear Private Limited என்ற புதிய தனியார் தொழிற் சாலைக்கு, முதலமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டி சிறப்பிக்க உள்ளார்கள். இந்த தொழிற்சாலையின் மூலம் சுமார் 13,500 நபர்கள் வேலை வாய்ப்பு பெற்று பயனடைவார்கள்.
தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பல்வேறு அரசுத் துறைகளின் கீழ் பணியாற்றும் வகையில் 32 நபர்களுக்கு கருனை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை வழங்க உள்ளார்கள். இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், மாவட்ட ஆட்சித்தலைவர், மாநகராட்சி மேயர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு உயர் அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




