மறைந்த மூத்த பத்திரிகையாளர் முரசொலி செல்வத்தின் உடல் சென்னை பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது
முரசொலி நாளிதழின் முன்னாள் ஆசிரியரும், எழுத்தாளருமான ‘முரசொலி’ செல்வம் (83), பெங்களூரில் நேற்று காலமானாா். பெங்களூரில் மாரடைப்பு காரணமாக காலமான ‘முரசொலி’ செல்வத்தின் உடல் சாலை மாா்க்கமாக, சென்னையில் உள்ள கோபாலபுரம் இல்லத்துக்கு வியாழக்கிழமை மாலை 5.45 மணியளவில் கொண்டு வரப்பட்டது.
சென்னை கோபாலபுரத்திலுள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சா் துரைமுருகன், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சா்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினா். மேலும், அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் வலைதளங்கள் மூலமாக இரங்கல் தெரிவித்தனர்.

தமிழக அமைச்சா்கள், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீா்செல்வம், மதிமுக பொதுச் செயலா் வைகோ, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவா்களும் ‘முரசொலி’ செல்வத்துக்கு அஞ்சலி செலுத்தியதுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து இரங்கலைத் தெரிவித்தனா்.

இதனையடுத்து, அடையார் மேம்பாலம் வழியாக முரசொலி’ செல்வத்தில் இறுதி ஊர்வலம் நடைபெற்றது. பின்னர் முரசொலி செல்வம் உடல் பெசன்ட் நகர் மின் மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு முரசொலி செல்வம் உடலுக்கு அவருடைய குடும்பத்தினர் இறுதி மரியாதை செலுத்தினர். இதையடுத்து, முரசொலி செல்வம் உடல் சென்னை பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.







