கண்டெய்னரை உடைத்து உள்ளே இருந்த 8 டன் மதிப்பிலான காப்பர், பித்தளை பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை மாதவரம் பகுதியை சேர்ந்தவர் 28 வயதான சர்வன்குமார். இவர் மஞ்சம்பாக்கம் பகுதியில் டிரான்ஸ்போர்ட் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த இவர் டெல்லி, ஹைதராபாத் போன்ற நகரங்களுக்கு அலுமினியம் காப்பர் பித்தளை பொருட்களை ஏற்றுமதி செய்து வருகிறார்.
கடந்த 8ம் தேதி இவருடைய நிறுவனத்தில் இருந்து, கண்டெய்னரில் 28 டன் எடை கொண்ட காப்பர், பித்தளை, அலுமினிய பொருட்கள் நிரப்பி சீல் வைத்து ரயில்கள் மூலம் திருவொற்றியூரில் உள்ள மத்திய அரசின் சரக்குகளை கையாளும் பெட்டக முனையத்திற்கு (CONCOR) அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில், மறுநாள் காலை பார்த்தபோது சீல் உடைக்கப்பட்டு எட்டு டன் எடை உள்ள பொருட்கள் திருடுபோனது தெரியவந்தது. பிறகு, திருடப்பட்ட பொருட்கள் குறித்து திருவெற்றியூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. தகவலறிந்த வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் இந்த சம்பவம் குறித்து தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது, சம்பவத்தில் ஈடுபட்ட பீகார் மாநிலத்தை சேர்ந்த நாராயணகுமார், கிரிசன், அணில்குமார், மணலி புதுநகர் பகுதியை சேர்ந்த இல்மன்பாபு மற்றும் ரவி ஆகிய 5 நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 8 லட்சம் ரூபாய் பணம், ஆறு டன் எடையுள்ள பழைய இரும்பு பொருட்கள், ஒரு ஈச்சர் வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட 5 பேரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்த நிலையில், இந்த சம்பவத்தில் தப்பி ஓடிய நபர்களையும் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், விசாரணையில் சர்வன் குமார் என்பவரின் பெயரில் உரிய ஆவணமின்றி 20 டன் எடையுள்ள காப்பர் கண்டெய்னர் வந்துள்ளதாக துணை மாநில வாரிய அலுவலருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கண்டெய்னருக்கு சீல் வைத்தனர்.
சினிமா பாணியில் மாதவரத்தில் இருந்து திருவொற்றியூர் வந்த கண்டெய்னர் லாரியில் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.








