மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரிக்கு திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கடிதம் எழுதினார்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் சுத்திகரிப்பு ஆலையில் இருந்து தொடர்ந்து வாயு கசிவு ஏற்பட்டுள்ளது. ஒரு மாதத்துக்கும் மேலாக மணலி, திருவொற்றியூர் பகுதிகளில் நச்சு வாயு கசிந்து வருகிறது.
வாயுவால் துர்நாற்றம் வீசுவதால் வீடுகளில் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்படக்கூடிய ஆபத்துகள் குறித்து மிகவும் அச்சமடைந்துள்ளதாகவும் அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
அந்தப் பகுதி மக்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, இந்த வாயு கசிவுக்கான காரணம், வாயுவின் தன்மை மற்றும் கசிவுக்கான காரணம் குறித்து கண்டறிய 5 பேர் கொண்ட நிபுணர் குழுவை தமிழக அரசு 21.07.2022 அன்று நியமித்தது.
குழு 22.07.2022 அன்று பாதிக்கப்பட்ட பகுதியை உடனடியாக ஆய்வு செய்து, 27.07.2022 அன்று ஆய்வு அறிக்கையை சமர்ப்பித்தது.
நிபுணர் குழு நடத்திய ஆய்வில், சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் இருந்து வாயு கசிந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. CPCL இலிருந்து கசிவு H2S (ஹைட்ரஜன் சல்பைடு) என்று சந்தேகிக்கப்படுகிறது.
இது குழந்தைகளின் மூளையை பாதிப்படையச் செய்யும். உடல்நலத்தில் கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தும். CPCL பிரச்சனையின் தீவிரத்தை அறியாமல் மெத்தனமாக செயல்பட்டு வருகிறது என்பது வேதனைக்குரியது.
நிபுணர் குழுவின் அனைத்து பரிந்துரைகளையும் CPCL ஏற்று, அதன் வாயு கசிவு பிரச்சனையை உடனடியாக சரிசெய்வதுடன், அதுவரை அதன் உற்பத்தி நடவடிக்கைகளை நிறுத்துவது முக்கியம்.
நிபுணர் குழு பரிந்துரைத்தபடி தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.








