சென்னை வெள்ள பாதிப்பு குறித்து தாமாக முன்வந்து விசாரிக்க முடியாது என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னையில் கடந்த ஒரு வாரமாக பெய்த அதி கனமழை காரணமாக பெரும்பாலான இடங்களில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. வெள்ள பாதிப்பு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் தமிழ்நாடு அரசு வேகம்காட்டி வருகிறது.
இந்த நிலையில் சென்னையில் வெள்ள பாதிப்பு மற்றும் மழைநீர் தேங்கியுள்ளது தொடர்பாக நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி என்பவர், தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வின் முன்பு கோரிக்கை விடுத்தார்.
தொடர்ச்சியாக பெய்துவந்த மழை தற்போதுதான் ஓய்ந்திருக்கிறது என குறிப்பிட்ட நீதிபதிகள், தேங்கிய தண்ணீரை அகற்ற அரசும், சென்னை மாநகராட்சியும் நடவடிக்கை எடுத்து வருவதாக குறிப்பிட்டனர். மீட்பு பணிகள் நடைபெற்று வருவதால், நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரிக்க முடியாது என தெரிவித்து வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தியின் கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்தனர்.







