டெல்டா மாவட்டங்களில் அதிகளவில் பயிர்கள் சேதமடைந்துள்ளதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, சென்னையில் இன்று மழை குறைந்துள்ளது, மாநகராட்சியில் 534 இடங்களில் மழைநீர் தேங்கியது, அதில் 204 இடங்களில் மழைநீரை வெளியேற்றிவிட்டோம் என்று தெரிவித்தார்.
சென்னையில் 22 சுரங்கப் பாதைகளில் 17 சுரங்கப் பாதைகளில் தண்ணீர் வெளியேற்றியாகிவிட்டது என்ற அமைச்சர் ராமச்சந்திரன், முறிந்து விழுந்த 480 மரங்களை உடனடியாக அகற்றிவிட்டதாகவும், 55 படகுகளை பயன்படுத்தி மீட்புப் பணிகள் நடைபெற்றன என்றும் குறிப்பிட்டார். தற்போது 1646 கன அடி நீர் மட்டுமே செம்பரம்பாக்கத்தில் திறக்கப்படுகிறது எனவும், பூண்டியில் அதிகளவு நீர் திறக்கப்பட்டது குறித்து 2 லட்சம் பேருக்கு செல்போன் மூலமாக தகவல் அனுப்பினோம் என்றும் கூறினார்.
டெல்டா மாவட்டங்களில் அதிகளவில் பயிர் சேதமடைந்துள்ளது, பயிர் சேதம் குறித்து கணக்கீடு நடத்திய பின் இழப்பீடு பற்றி முதலமைச்சர் அறிவிப்பார் என்றும் கூறினார். நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ள நிலையில், அதனை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
Advertisement: